2013-10-08 15:21:50

திருத்தந்தை பிரான்சிஸ் : செபம் கடவுளுக்குக் கதவைத் திறந்து விடுகிறது


அக்.08,2013. செபிக்கவும் மன்னிக்கவும் தெரிந்த இதயத்தைக் கொண்டிருப்பவரே கிறிஸ்தவர் என்று இச்செவ்வாய் காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்தியத் திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவைத் தனது வீட்டில் வரவேற்ற மார்த்தா மரியா சகோதரிகள் பற்றிய இந்நாளைய நற்செய்தியையும், இறைமனிதர் யோனா பற்றிய முதல் வாசகத்தையும் மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், செபம் வெறும் இயந்திரத்தனமான செயலாக இல்லாதவரை அது அற்புதங்களை நிகழ்த்தும் என்று கூறினார்.
மார்த்தாவுக்கும் யோனாவுக்கும் செபிக்கத் தெரியவில்லை என்றுரைத்த திருத்தந்தை, மரியா நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டார் என்று இயேசு சொன்னார், ஏனெனில் மரியா இயேசுவின் காலடிகளில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு தனது இதயத்திலிருந்து செபித்துக்கொண்டிருந்தார் என்றும் கூறினார்.
நம் வாழ்வில் முதல் வேலை செபமாக இருக்க வேண்டும், இந்தச் செபம் கிளி போன்று வார்த்தைச் செபமாக இல்லாமல், நம் ஆண்டவரை உற்றுநோக்கி, அவர் சொல்வதற்குச் செவிசாய்த்து அவரிடம் கேட்பதாக இருக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை.
செபம் அற்புதங்களை நிகழ்த்தும் என்பதை நாம் அறிந்துள்ளோம் என்றும், செபம், நினிவே பழங்கால நகரில்கூட புதுமை நிகழ்த்தியது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், நினிவே நகரைப் பொருத்தவரை இரக்கத்தை அல்லாமல் நீதியை விரும்பிய யோனாவின் எண்ணத்தையே மார்த்தாவின் எண்ணமும் ஒத்திருந்தது என்றும் கூறினார்.
இதயத்திலிருந்து எழும்பாமல் வாயப்பாடாக உள்ள செபமும், மன்னிப்பின்றி நீதிக்காக ஆசைப்படும் செபமும் சோதனைகள். எனவே கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் நல்ல பகுதியைத் தேர்ந்தெடுப்பதற்காக, இச்சோதனைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
நாம் செபம் செய்யாமல் இருக்கும்போது நம் கதவுகளை ஆண்டவருக்கு மூடிவிடுகிறோம், அவரால் ஒன்றும் செய்ய இயலாது என அவருக்கு நம் கதவுகளை மூடிவிடுகிறோம், மாறாக, பிரச்சனைகள், இடரான சூழல்கள், துன்பங்கள் ஆகியவற்றில் ஆண்டவருக்கு நம் கதவுகளைத் திறக்க வேண்டும், அப்போது அவர் வந்து உதவுவார் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.