2013-10-08 15:42:41

Higgs boson அறிவியலாளர்களுக்கு நொபெல் இயற்பியல் விருது


அக்.08,2013. பிரிட்டனின் Peter Higgs, பெல்ஜியத்தின் Francois Englert ஆகிய இரு அறிவியலாளர்களுக்கு இவ்வாண்டுக்கான நொபெல் இயற்பியல் விருது வழங்கப்படுவதாக இச்செவ்வாயன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Higgs boson கொள்கை அல்லது கடவுள் துகள் குறித்த கண்டுபிடிப்புக்களுக்காக இவ்விருவருக்கும் நொபெல் இயற்பியல் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தின் அடிப்படை மூலக்கூறுகளுக்கும் ஏன் எடை உள்ளது என்பது குறித்து விளக்குவதற்கான ஒரு முறையை 1960களில் பயன்படுத்திய பல இயற்பியல் அறிவியலாளர்களில் இவர்களும் அடங்குவர்.
மேலும், நொபெல் மருத்துவ விருது அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஜேம்ஸ் ரோத்மன், ராண்டி ஷீக்மன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் சுதோப்புக்கு கிடைத்துள்ளது.
வேதியப் பொருள்களை, உடலில் உள்ள செல்களுக்குக் கொண்டு செல்லும் முறை குறித்த ஆய்வுகளுக்காக, அமெரிக்கப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜேம்ஸ் ரோத்மன், ராண்டி ஷீக்மன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் சுதோப்புக்கு, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அணுத்திரண்மங்கள், ஹார்மோன்கள் போன்ற மனித செல்களினால் தயாரிக்கப்படும் மூலக்கூறுகள், 'வெசிக்கல்ஸ்' என்ற சிறு பொதிகளாக, உரிய நேரத்தில், உரிய இடத்துக்கு எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
நீரிழிவு மற்றும் மூளைக் குறைபாடுகள் போன்ற நோய்கள் குறித்த ஆய்வுகளுக்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.