2013-10-07 16:34:01

திருத்தந்தை பிரான்சிஸ் : செபத்தின்வழி விசுவாசத்தை அதிகரிப்போம்


அக்.07,2013. செபத்தின்வழி இறைவனைத்தேடி அதன்மூலம் விசுவாசத்தை அதிகரிக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபமே விசுவாசத்தின் மூச்சுக்காற்று, அதுவே இறைவனுடன் ஆன்மா நடத்தும் கலந்துரையாடல்' என எடுத்துரைத்தார்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தில் 'தங்கள் விசுவாசத்தை அதிகரிக்க உதவுமாறு சீடர்கள் யேசுவிடம் கேட்ட பகுதி பற்றி மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை, 'எங்கள் விசுவாசத்தை அதிகரிக்க உதவும்' என தன்னோடு சேர்ந்து செபிக்குமாறு கூட்டத்தினரை நோக்கி அழைப்புவிடுத்தார்.
மனிதனால் இயலாத, அதேவேளை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத செயல்களை ஆற்றுவதற்கு பெரிய அளவிலான விசுவாசம் தேவையில்லை, மிகச்சிறிய அளவு விசுவாசம் இருந்தாலே போதும் என்றார்.
சிறிய அளவு விசுவாசம் கொண்டு மலைகளையும் நகர்த்திய எளிமையான மக்கள் குறித்து நமக்குத்தெரியும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் கடவுளின் வல்லமையின் துணைகொண்டு கிறிஸ்துவுக்குச் சாட்சியம் வழங்கமுடியும் என்றார்.
கடந்த சனியன்று, திருஅவையில் முத்திப்பெற்றவராக அறிவிக்கப்பட்ட 14 வயது குருமாணவர் ரொலாண்தோ ரிவி குறித்தும், தன் மூவேளை செபஉரையின் இறுதியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மாதம் மூன்றாம் தேதி இத்தாலியின் Lampedusa கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 100க்கும் மேற்பட்ட ஆப்ரிக்கக் குடியேற்றதாரர்கள் உயிரிழந்தது குறித்தும் எடுத்துரைத்து, அவர்களுக்காக சிறிதுநேரம் மௌனமாக செபிக்கும்படியும் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.