2013-10-07 16:18:58

திருத்தந்தை: நம்மை வடிவமைக்க இறைவனை அனுமதிப்போம்


அக்.07,2013. தாங்கள் தொந்தரவுச் செய்யப்படாமல் இருப்பதற்கு ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து தப்பிச்செல்லவே விரும்புகின்றனர் என இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நினிவே நகருக்கு இறைவனால் அனுப்பப்பட்ட யோனாஸ், அதிலிருந்து தப்புவதற்காக இஸ்பெயின் நோக்கிப் பயணம் செய்தது குறித்து இத்திங்கள் முதல் வாசகம் கூறுவதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், 'இறைவனிடமிருந்து தப்பிச்செல்லல்' என்ற கருத்தை மையமாக வைத்து தன் மறையுரையை வழங்கினார்.
இறைவனின் பரிந்துரைகளுக்குச் செவிமடுக்காமல், அவரின் குரலைக்கேட்காமல் தப்பிச்செல்ல முயல்வது ஒவ்வொருவருக்கும் வரும் சோதனையாக உள்ளது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனின் குரலைக்கேட்காமல் தப்பிச்செல்வதில் வேறு சில வழிகளும் உள்ளன என்ற திருத்தந்தை, அதற்கு உதாரணமாக, இயேசு கூறிய நல்ல சமாரியர் உவமையில் வரும் குரு மற்றும் லேவியர் பற்றியும் எடுத்துரைத்தார். காயமுற்றவரைக் கண்டும் வேறுபக்கம் திரும்பிச்சென்ற இவர்கள், அந்த இடத்தில் இறைவனின் குரலைக்கேட்க தவறிவிட்டார்கள் என்ற திருத்தந்தை, அதேவழியாக வந்த பாவியாகிய சமாரியரே இறைவனின் குரலுக்குச் செவிமடுத்து உதவிகளை ஆற்றினார் என்றார்.
இறைவாக்கினர் யோனாவாலும், குருவாலும் லேவியராலும் கேட்கப்பட மறுத்த இறைவனின் குரலை பாவியாகிய சமாரியர் செவிமடுத்தது, இறைவனின் கைகளால் தான் எழுதப்பட அவரை அனுமதித்ததாகும், ஏனெனில் ஏனைய மூவரும் தங்களுக்குரியதை தாங்களே தேர்வுசெய்துகொண்டனர், ஆனால் சமாரியரோ தான் இறைவனால் மாற்றப்பட அனுமதித்தார் என்றார் திருத்தந்தை.
நம் வாழ்வை நாமே வடிவமைக்க விரும்புகிறோமா அல்லது இறைவன் நம்மை வடிவமைக்கட்டும் என அவர் கைகளில் ஒப்படைக்க ஆவல் கொள்கிறோமா என்ற கேள்வியையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.