2013-10-05 15:11:50

முதுபெரும் தந்தை சாக்கோ : மறைசாட்சி வாழ்வு, ஈராக் திருஅவைக்கு ஒரு கொடை


அக்.05,2013. விசுவாசம் ஒரு கருத்துக்கோட்பாட்டு விவகாரமாக இல்லாமல், ஓர் உண்மையான இறையனுபவமாக இருக்கும் ஈராக் திருஅவையில், மறைசாட்சி வாழ்வு தனிவரமாக உள்ளது என்று பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ கூறினார்.
உரோம் நகரில் சான் எஜிதியோ கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அமைதி குறித்த கருத்தரங்கில் பகிர்ந்துகொண்ட முதுபெரும் தந்தை சாக்கோ, ஈராக்கிலுள்ள நசுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், உலகெங்கும் வாழும் சகோதர சகோதரிகள் தங்கள் விசுவாசத்தையும் அர்ப்பணத்தையும் புதுப்பித்து வாழ உதவ முடியும் என்று கூறினார்.
ஈராக் கிறிஸ்தவர்கள் தங்கள் நாட்டிலே தங்கி தாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைத் தாங்குவதற்கு மேற்கின் ஆதரவு அவசியம் என்பதையும் வலியுறுத்தினார் முதுபெரும் தந்தை சாக்கோ.
‘நம்பிக்கையாய் இருப்பதற்குத் துணிச்சல் : உரையாடலில் மதங்களும் கலாச்சாரங்களும்’ என்ற தலைப்பில் கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 வரை உரோமில் நடைபெற்ற கருத்தரங்கில் 60 நாடுகளிலிருந்து, உலகின் பெரிய மதங்களின் பிரதிநிதிகள், ஐரோப்பிய கலாச்சார மற்றும் அரசியல் வாழ்வின் பிரதிநிதிகள் என 400 பேர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.