2013-10-04 16:55:11

திருத்தந்தை பிரான்சிஸ் : இப்பூமியை இரத்தத்தால் மூடும் ஆயுதம் ஏந்திய சண்டைகள் முடிவடையட்டும்


அக்.04,2013. அசிசி நகரின் பணக்கார வணிகரின் மகனாகிய பிரான்சிசுக்கு இயேசுவைச் சந்தித்த பின்னர் அனைத்தையும் களைவது எளிதாக இருந்தது. ஏழ்மை என்ற பெண்ணை மணந்து கொள்வதற்காகவும், நம் வானகத்தந்தையின் உண்மையான மகனாக வாழ்வதற்காகவும் சுதந்திரமான வாழ்வும் எளிதாக இருந்தது. ஏழைகள்மீது அன்பு, கிறிஸ்துவின் வறுமையில் அவரைப் பின்பற்றுவது ஆகிய இரண்டும் புனித பிரான்சிசின் வாழ்வில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று பிரிக்கமுடியாதபடி ஒன்றிணைந்து இருந்தன. கிறிஸ்துவுக்கான புனித பிரான்சிசின் பயணம் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை உற்றுநோக்கியதிலிருந்து தொடங்கியது. ஒவ்வொரு நேரத்திலும் இயேசுவை உற்றுநோக்கும்போது அவர் தமது வாழ்வை நமக்கு வழங்குவதையும், நம்மைத் தம்மிடம் ஈர்ப்பதையும் உணர முடியும். புனித தமியான் ஆலயத்தில் புனித பிரான்சிஸ் இதனை சிறப்பான விதத்தில் அனுபவித்தார். சிலுவையில் இயேசுவின் கண்கள் மூடியிருக்கவில்லை. அவை அகலத் திறந்திருக்கின்றன. நம் இதயங்களைத் தொடும் வழியில் அவர் நம்மை உற்று நோக்குகிறார். சிலுவை தோல்வியை அல்ல, மாறாக, வாழ்வான சாவைப் பற்றிப் பேசுகிறது. சிலுவையின் முன்னால் நாமும் இருக்க இப்புனிதரிடம் செபிப்போம்.
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் தாழ்ச்சியும் உடையவன். ஆகவே என் நகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்கிறார். கிறிஸ்துவைப் பின்செல்லும் எவரும் உண்மையான அமைதியைப் பெறுகின்றார் என்பதற்கு, புனித பிரான்சிஸ் சாட்சியாக இருக்கிறார். புனித பிரான்சிசைப் பற்றி நினைக்கும் பலர் அமைதி பற்றி நினைக்கின்றனர். அவர் பெற்ற அமைதி, எத்தகைய அமைதி? அவர் வாழ்ந்து அனுபவித்த அமைதி எத்தகையது? அது நம் எல்லார்மீதும் கொண்டிருந்த மாபெரும் அன்பால், சிலுவையின் அன்பால் பிறக்கும் கிறிஸ்துவின் அமைதி. நாம் அமைதியின் கருவிகளாகச் செயல்பட இப்புனிதரிடம் செபிப்போம்.
அடுத்து, புனித பிரான்சிஸ் அனைத்துப் படைப்பின்மீது, அவற்றின் நல்லிணக்கத்தின்மீது அன்பு கொண்டிருந்தார். கடவுளின் படைப்பு அனைத்தையும் மதிப்பதற்கு இப்புனிதர் சான்றாகத் திகழ்கிறார். அமைதியும் நல்லிணக்கமும் மலரும் இடமாக கடவுள் உலகைப் படைத்தார். புனித பிரான்சிசும் அமைதி மற்றும் நல்லிணக்க மனிதர். அனைத்துச் சக்தி மற்றும் பணிவான அன்புடன் இந்த அமைதியின் நகரிலிருந்து மீண்டும் சொல்கிறேன் என்ற திருத்தந்தை பிரான்சிஸ், நாம் படைப்பை மதிப்போம். அழிவின் கருவிகளாக இல்லாமல் இருப்போம். ஒவ்வொரு மனிதரையும் மதிப்போம். இப்பூமியை இரத்தத்தால் மூடும் ஆயுதம் ஏந்திய சண்டைகள் முடியட்டும். ஒவ்வோர் ஆயுத மோதல்கள் மௌனமடையட்டும். எல்லா இடங்களிலும், வெறுப்பு அன்பையும், காயம் மன்னிப்பையும், இணக்கமின்மை ஒன்றிப்பையும் கொண்டுவரட்டும். புனித பிரான்சிஸ் மிகவும் அன்புசெய்த புனிதபூமியிலும், சிரியாவிலும், மத்திய கிழக்கிலும் உலகின் எல்லா இடங்களிலும் வன்முறை, பயங்கரவாதம், போர் ஆகியவற்றால் இறக்கும், துன்புறும் மற்றும் அழும் அனைவரின் குரலக்ள் கேட்கப்படட்டும். இந்த நம் உலகில் கடவுளின் கொடையாகிய அமைதியும் நல்லிணக்கமும் ஏற்பட புனித பிரான்சிசிடம் செபிப்போம் என்றார். இத்தாலிக்காகவும் உலகுக்காகவும் இன்று நான் செபிக்கிறேன் என்று செபம் சொல்லி திருப்பலி மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.