2013-10-03 16:18:41

வன்முறையைப் புறந்தள்ளி, அமைதியை நிலைநாட்ட அனைத்து மக்களும் இணைய வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்


அக்.03,2013. வன்முறையைப் புறந்தள்ளி, அமைதியையும், நீதியையும் நிலைநாட்டும் முயற்சியில் அனைத்து மக்களும் இணைய வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக்கொண்டார்.
அக்டோபர் 2, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தியின் பிறந்தநாள், அனைத்துலகெங்கும் வன்முறைகளற்ற அகிம்சை நாள் என்று 2007ம் ஆண்டு முதல் ஐ.நா.வால் கொண்டாடப்படுகிறது.
இந்த சிறப்பு நாளையொட்டி, செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், காந்தி அவர்களின் துணிவு நம் அனைவரையும் தூண்ட வேண்டும் என்றும், நல்லதென்று தெரிவதை எப்பாடு பட்டாகிலும் நிலை நிறுத்த அவரைப் போல முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அகிம்சை என்பது சக்தியற்ற, ஆக்கப்பூர்வமற்ற முறை என்ற தவறான கருத்து நிலவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய பான் கி மூன் அவர்கள், சரியான வழியில் சிந்தித்தால், அகிம்சை வழியே துணிவுள்ள, ஆக்கப்பூர்வமான வழி என்பதை உணரலாம் என்று கூறினார்.
மில்லென்னிய இலக்குகளை அடையும் 2015ம் ஆண்டை நோக்கிச் செல்லும் உலகம் வறுமையை அகற்றி, நீதியுடன் இச்சமூகத்தை உருவாக்கும்போது, வன்முறைகளுக்கு இடமின்றி போகும் என்பதையும் பான் கி மூன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.