2013-10-03 16:18:22

"திருத்தந்தை பிரான்சிஸ்: எங்கள் சகோதரர், எங்கள் நண்பர்" – புதிய நூல்


அக்.03,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ஜென்டீனா நாட்டில் வாழ்ந்த வாழ்க்கை, அவரது பணி ஆகியவற்றைக் குறித்து 20 பேர் பகிர்ந்துகொண்ட நினைவுகளைத் திரட்டி, நூல் ஒன்று வெளியாகியுள்ளது.
தன் சொற்களாலும், செயல்களாலும் அடிக்கடி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பின்புலத்தை அலசும் நூல் இது என்று, இந்நூலின் தொகுப்பாசிரியர் Alejandro Bermudez அவர்கள் கூறினார்.
"திருத்தந்தை பிரான்சிஸ்: எங்கள் சகோதரர், எங்கள் நண்பர்" என்ற தலைப்பில் Ignatius அச்சகம் வெளியிட்டுள்ள இந்நூலில், இயேசு சபையைச் சேர்ந்த 10 துறவியரும், ஏனையோர் 10 பெரும் தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
Buenos Aires நகரில் தர்மம் கேட்டு வாழும் 62 வயதான ஒருவர், கர்தினால் பெர்கோலியோ அவர்கள் ஒவ்வொரு நாளும் தன்னைப் புன்முறுவலுடன் சந்தித்து, தனக்காக வேண்டிக்கொள்ளும்படி கேட்பார் என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
"திருத்தந்தை பிரான்சிஸ்: எங்கள் சகோதரர், எங்கள் நண்பர்" என்ற இந்நூல் தற்போது இஸ்பானிய மொழியிலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளன.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.