2013-10-02 14:49:47

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


அக்.02,,2013. ஞாயிறு மழைக்குப்பின், இவ்வாரத்தின் முதல் மூன்று நாட்களும் மிதமான வெப்பத்தைத் தாங்கி, சுற்றுலாப் பயணிகளுக்கு இதமானச் சூழலை உரோம் நகர் காலநிலை வழங்கிக்கொண்டிருக்க, தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். கடந்த வாரங்களில் அவர் வழங்கிவரும் 'கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கை' குறித்த விளக்கங்களின் தொடர்ச்சியாக இவ்வார புதன் மறைபோதகமும் இருந்தது.
நம்முடைய விசுவாச அறிக்கையில் நாம், 'ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருஅவையை விசுவசிக்கின்றேன்' என அறிக்கையிடுகின்றோம். திருஅவை, பாவிகளால் நிறைந்துள்ளது என்பதை கண்கூடாக தெளிவாகக்காணும் நாம் எவ்வாறு திருச்சபை 'பரிசுத்தமானது' என அறிக்கையிடமுடியும்? என்ற கேள்வியுடன் தன் இவ்வார புதன் மறையுரையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். தூய பவுலின் வார்த்தைகளுடன் இதனை நாம் புரிந்துகொள்ளமுடியும். 'கிறிஸ்து, திருஅவை மீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார்......... அதனைத் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார்'(எபேசி. 5:25-26) என தெளிவுற எடுத்துரைக்கிறார் தூய பவுல்.
கிறிஸ்துவிலிருந்து பிரிக்கமுடியாத வகையில் அவருடன் ஒன்றாக இணைந்துள்ளது திருஅவை. அதுவே தூய ஆவியின் உறைவிடம். திருஅவை, பரிசுத்தமானதாக உருவாக்கப்பாட்டுள்ளது நம்மாலோ நம் நற்கூறுகளாலோ அல்ல, மாறாக, சிலுவையில் கிறிஸ்துவின் தியாகப்பலி வழி வந்த முடிவற்ற நற்கூறுகளின் வழியாகவேயாகும். மீட்கப்படவும், புதுப்பிக்கப்படவும், திருஅவையின் ஒன்றிப்பில் தூய்மையாக்கப்படவும், பாவிகளாகிய நமக்கு அழைப்புவிடுக்கிறார் கிறிஸ்து. ஆகவே, கடவுளின் அன்புடன் கூடிய கருணையில் நம்பிக்கை கொள்ளவும், ஒப்புரவு மற்றும் திருநற்கருணை எனும் திருவருள்சாதனங்களில் கிறிஸ்துவைச் சந்திக்கவும், அனைவருக்கும், மிகப்பெரும் பாவிகளுக்கும் திருஅவை தொடர்ந்து அழைப்பு விடுத்துவருகிறது. கிறிஸ்துவின் அழைப்பிற்குப் பதிலுரைக்கவும், தூய ஆவியின் செயல்பாடுகளில் நம்பிக்கை வைக்கவும், நம் வாழ்வில் உண்மையான மகிழ்வைக் கொணரும் தூய நிலைக்காக உழைக்கவும், செபிக்கவும், அஞ்சாதிருப்போமாக.
இவ்வாறு, தன் புதன்பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியாவிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் உட்பட அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து, அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்







All the contents on this site are copyrighted ©.