2013-10-02 16:01:51

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எட்டு கர்தினால்களுடன் துவக்கியுள்ள கூட்டத்தைக் குறித்து வத்திக்கான் பேச்சாளர்


அக்.02,2013. திருத்தந்தையர் வழக்கமாகத் தங்கியிருக்கும் இல்லத்தில் இச்செவ்வாய் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினால்கள் எட்டுப் பேருடன் துவக்கியக் கூட்டம், தற்போது திருத்தந்தை தற்போது தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தில் நடைபெற்று வருகிறது என்று வத்திக்கான் பேச்சாளர் அருள் பணியாளர் Federico Lombardi கூறினார்.
இப்புதன் மதியம் செய்தியாளர்களிடம் பேசிய அருள் தந்தை Lombardi அவர்கள், இக்கூட்டத்தில் இதுவரை நிகழ்ந்தவற்றை விளக்கிக் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் கர்தினால்கள், உலகின் பல்வேறு பகுதிகளின் பிரதிநிதிகள் என்று காண்பதைவிட, அவர்கள் ஒவ்வொருவரின் அனுபவம் என்ற அடிப்படையிலேயே திருத்தந்தை அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை அருள் தந்தை Lombardi அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இச்செவ்வாயன்று நடைபெற்ற கூட்டங்களில் திருஅவையைக் குறித்து பொதுவான கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று கூறிய அருள் பணியாளர் Lombardi அவர்கள், மதிய அமர்வில், ஆயர்கள் மாமன்றம் குறித்த கருத்துக்கள் பேசப்பட்டன என்பதைத் தெளிவுபடுத்தினார்.
திருஅவையின் மையமாக விளங்கும் வத்திக்கானில் தற்போது செயலாற்றிவரும் பல்வேறு திருப்பீட பேராயங்கள், திருப்பீட அவைகள் ஆகியவற்றின் அமைப்பு முறை குறித்து இக்கூட்டத்தில் ஆழமான ஆய்வுகளும், பரிந்துரைகளும் செய்யப்படும் என்றும் அருள் தந்தை Lombardi அவர்கள் கூறினார்.
ஒவ்வொரு நாள் காலையிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் கர்தினால்கள் இணைந்து நிறைவேற்றும் கூட்டுத் திருப்பலி, புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிகழ்ந்து வருகிறது என்பதையும் அருள் பணியாளர் Lombardi அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.