2013-10-02 16:02:44

சிரியாவில் வாழும் அனைவருக்குமே மனநல மருத்துவர்கள் தேவை - மருத்துவப் பணியாளர்


அக்.02,2013. சிரியாவில் வாழும் அனைவருக்குமே மனநல மருத்துவர்கள் தேவை; எங்கள் வீடுகள், வாழ்வு ஆதாரங்கள் அனைத்தும் அழிந்துள்ள நிலையில், இந்தத் தேவையை நாங்கள் மிக அதிகம் உணர்கிறோம் என்று சிரியாவின் மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறினார்.
சிரியா நாட்டையோட்டி, துருக்கியில் அமைந்துள்ள Kilis என்ற ஊரில், Malteser International என்ற ஜெர்மன் கத்தோலிக்க அமைப்பும், International Blue Crescent என்ற துருக்கி இஸ்லாமிய அமைப்பும் இணைந்து நடத்திவரும் ஒரு நடமாடும் மருத்துவமனையில் பணியாற்றும் Ali Ahmad என்ற மருத்துவப் பணியாளர் இவ்வாறு கூறினார்.
இரு வாரங்களுக்கு முன் செயலாற்றத் துவங்கிய இந்த நடமாடும் மருத்துவமனை, சிரியாவிலிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பணியாற்றி வருகிறது.
2011ம் ஆண்டு முதல் சிரியாவில் தொடர்ந்து வரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள வயது வந்தவர்களுக்கே தங்கள் சூழலைப் புரிந்துகொள்வது கடினமாகிவரும் வேளையில், குழந்தைகளின் நிலை இன்னும் கவலை தரும் ஒன்றாக மாறிவருகிறது என்று சிரியாவில் பணியாற்றிய ஆசிரியர் Ole Nasser கூறினார்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.