2013-10-02 15:01:27

அன்னைமரியா திருத்தலங்கள் – "கொரோமோத்தோ அன்னைமரியா ", வெனெசுவேலா


அக்.02,2013. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒவ்வொரு நாடும் ஒரு தனிப்பட்ட அன்னை மரியா பக்தியைக் கொண்டுள்ளது. அன்னை மரியாவை தங்கள் தங்கள் நாடுகளின் பாதுகாவலராக அறிவித்து அவ்வன்னையை தங்களது நாட்டின் தனித்துவத்தோடு பிணைத்துள்ளன. இந்நாடுகளில் போற்றப்படும் தேசிய அன்னை மரியாவுக்கு மரபு வழியாகப் பல செய்திகள் சொல்லப்படுகின்றன. தங்களின் துன்ப துயரங்களில் இவ்வன்னையிடம் தஞ்சம் புகுந்து தங்களை அர்ப்பணிக்கின்றனர் இந்நாடுகளின் மக்கள். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனெசுவேலா நாட்டின் பாதுகாவலர் Coromoto அன்னை மரியா.
ஏறக்குறைய 1591ம் ஆண்டில் வெனெசுவேலா நாட்டின் Portuguesa மாநிலத்தின் Guanare பகுதியை இஸ்பானியர்கள் சென்றடைந்தார்கள். அப்போது அப்பகுதியில் வாழ்ந்துவந்த Cospes என்ற பூர்வீக இன மக்கள் அப்பகுதியைவிட்டு, அந்நாட்டின் வட பகுதியிலிருக்கும் துக்குபிதோ ஆற்றுப்பக்கம் சென்று குடியேறச் சென்றனர். ஏனெனில் வெள்ளையர்களையோ அல்லது அவர்களது மதத்தையோ இப்பழங்குடி மக்கள் பின்பற்ற விரும்பவில்லை. வெள்ளையர்கள் நற்செய்தி அறிவித்ததை இவர்கள் எதிர்த்தார்கள். ஐம்பது ஆண்டுகள் கழித்து இம்மக்கள் இஸ்பானியர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்தாலும், இந்த மக்கள், இஸ்பானியர்களின் குடியிருப்பு நகரத்திலிருந்து சற்று தூரத்தில் சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். இஸ்பானியர்களும், Cospes என்ற பூர்வீக இன மக்களும் அமைதியில் வாழ்ந்தாலும் 1651ம் ஆண்டுவரை ஒருவர் மற்றவரோடு தொடர்பின்றி தீவுகள்போல் வாழ்ந்து வந்தனர். ஏனெனில் இந்த 1651ம் ஆண்டில் Cospes என்ற பூர்வீக இனத் தலைவரும், அவரது மனைவியும் ஓர் அசாதாரணக் காட்சியைக் கண்டார்கள்.
துக்குபிதோ ஆற்றின் கால்வாய்த் தண்ணீரில் ஓர் அழகிய பெண் தங்களை அன்புடன் நோக்கியதை இந்தப் பூர்வீக இனத் தலைவரும், அவரது மனைவியும் கண்டனர். அப்பெண் மடியில் வைத்திருந்த சிறிய குழந்தையும் அவர்களைப் பார்த்து அன்புப் புன்னகையை உதிர்த்தது. இந்த அதிசயப் பெண் அத்தலைவரிடம், உமது இன மக்களோடு இந்தக் காட்டைவிட்டு அந்த வெள்ளையர்களிடம் செல். அங்கு விண்ணகத்தில் நுழைவதற்கு உதவியாக, தலையில் தண்ணீர் ஊற்றி திருமுழுக்குப் பெற்றுக்கொள் என்று சொன்னார். இந்த அழகான பெண்ணைப் பார்த்தது, அப்பெண் கூறிய சொற்கள் இவற்றால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவ மதத்தில் தனது இனத்தவர் முழுவதும் சேருமாறுச் செய்தார். ஆனால் இந்தப் பழங்குடி இனத் தலைவர் காட்டிலே வாழ்ந்து பழக்கப்பட்டதால், காட்டில் சுதந்திரமாக வாழப் பழகியிருந்ததால் புதிய வாழ்வுமுறையில் தன்னை ஈடுபடுத்த அவரால் இயலவில்லை. எனவே அவர் தனது குடும்பத்துடன் தனது சொந்தக் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். இச்சமயம் அன்னைமரியா அத்தலைவரின் எளிய குடிசையில் காட்சி கொடுத்தார். அன்னைமரியாவை முழுவதும் சூழ்ந்திருந்த ஒளிக்கதிர்கள் அக்குடிசையை தீப்பற்றச் செய்தன. இப்படிச் செய்தும் அன்னைமரியாவால் அவரின் மனதை மாற்ற இயலவில்லை. அதற்கு மாறாக அநDதத் தலைவர் அந்த துரதிஷ்டப் பெண்ணை அச்சுறுத்துவதற்கு தனது ஆயுதங்களை எடுத்தார். அப்பெண்ணைப் பிடிப்பதற்காகக் மிகவும் கோபமாக தனது கையை நீட்டியபோது அப்பெண் அவரின் கண்களுக்கு முன்பாகவே மறைந்துபோனார். ஆனால் மூடியிருந்த அவரின் உள்ளங்கைகளுக்கு இடையில் அன்னைமரியின் உருவம் பதிந்த ஓர் அட்டை இருந்தது. இக்காட்சி 1652ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்தது.
அந்தப் புனித அட்டை 27 மில்லி மீட்டர் உயரம் மற்றும் 22 மில்லி மீட்டர் அகலத்தைக் கொண்டிருந்தது. அந்த அட்டை ஒரு மெல்லிய தாளால் செய்யப்பட்டிருந்தது. புனித கன்னி மரியா அரியணையில் அமர்ந்திருப்பதுபோலவும், அவரது மடியில் குழந்தை இயேசு அமர்ந்திருப்பது போலவும் அந்த உருவம் பதிந்திருந்தது. பழங்குடி இனத்தவர் பயன்படுத்தும் மை மற்றும் கூர்மையான பென்னால் அது வரையப்பட்டதுபோல் இருந்தது. அப்படத்தில் அன்னைமரியா கருஞ்சிவப்பு நிறத்தில் நீண்ட அங்கியை அணிந்திருந்தார். குழந்தை இயேசு வெண்மைநிற உடுப்பை அணிந்திருந்தார். இந்தத் திருவுருவம் ஆபரணங்களால் அழகுசெய்யப்பட்டு ஒரு பெரிய கதிர்ப்பாத்திரத்தில் வைக்கப்பட்டு மக்களின் வணக்கத்துக்கு வைக்கப்பட்டது. வெனெசுவேலா ஆயர்களின் வேண்டுகோளின்பேரில் 1944ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவ்வன்னைமரியை வெனெசுவேலா நாட்டுப் பாதுகாவலராக அறிவித்தார். அத்தாய் காட்சி கொடுத்ததன் மூன்றாம் நூற்றாண்டையொட்டி 1952ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இவ்வன்னைக்கு அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்பட்டது. திருத்தந்தையின் பிரதிநிதியாக ஹவானா பேராயர் மானுவேல் பெட்டான்கூட், கொரோமோத்தோ அன்னைமரியாவுக்கு முடிசூட்டினார்.
வெனெசுவேலா மக்கள் கொரோமோத்தோ அன்னையின் விழாவை ஒவ்வோர் ஆண்டும் மூன்று தருணங்களில் சிறப்பிக்கின்றனர். இந்தத் தேசியத் திருத்தலம் அந்நாட்டினர் அனைவரும் சந்திக்கும் இடமாக உள்ளது. 1949ம் ஆண்டு மே 24ம் தேதியன்று திருத்தந்தை 12ம் பத்திநாதர் இத்திருத்தலத்தைப் பசிலிக்காவாக அறிவித்தார். இப்பசிலிக்கா வெனெசுவேலாவின் Guanareல் உள்ளது. அன்னைமரியா தம் மக்களை மனம் மாற்றுவதற்கு தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். நமது மனமாற்றத்துக்காகவும் உலகின் அமைதிக்காகவும் அவ்வனைமரியிடம் நாமும் செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.