2013-10-01 16:38:55

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவரின் பாதை பழிவாங்கும் பாதையல்ல


அக்.,01,2013. கிறிஸ்தவரின் பாதை பழிவாங்கும் பாதையல்ல, மாறாக, கிறிஸ்தவரின் பாதை தாழ்மையும் சாந்தமும் நிறைந்த பாதை என்று இச்செவ்வாய் காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்தியத் திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் நிர்வாகத்தில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் எட்டுக் கர்தினால்களுடன் சேர்ந்து கூட்டுத்திருப்பலி நிகழ்த்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால்களுடன் நடைபெறும் கூட்டம், ஒவ்வொருவரும் மிகவும் தாழ்மையுள்ளவர்களாக மாறி, கடவுளில் அதிக நம்பிக்கை வைக்க உதவும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
மேலும், இயேசுவையும் அவரது சீடர்களையும் ஏற்றுக்கொள்ளாத அந்த ஊர் மக்களை வானத்திலிருந்து தீ வந்து அழிக்குமாறு செய்யவா என்று இயேசுவின் இரு சீடர்கள் கேட்டபோது அவர் அவர்களைக் கடிந்து கொண்டதை இந்நாளைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவரின் பாதை பழிவாங்கும் பாதையல்ல என்று கூறினார்.
புனித குழந்தை தெரேசாள் திருவிழாவாகிய இன்று, தாழ்மை, கனிவு, நன்மைத்தனம் ஆகிய உணர்வுகளை நினைத்துப் பார்ப்பது நமக்கு நல்லது என்றும், இந்த உணர்வையே நம் ஆண்டவர் நம் ஒவ்வொருவரிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்த உணர்வுக்கு நம்மை இட்டுச்செல்லும் சக்தி, அன்பிலும், பிறரன்பிலும், வானகத்தந்தையின் கரங்களில் நாம் இருக்கிறோம் என்ற விழிப்புணர்விலும் கிடைக்கின்றது என்று மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாயன்று வத்திக்கானில் தொடங்கும், ஆலோசனை வழங்கும் இக்கர்தினால்களின் கூட்டம், தாழ்மை, பொறுமை, சாந்தம், கடவுள் நம்பிக்கை ஆகிய பண்புகளில் நம்மை இன்னும் அதிகமாக வளர்ப்பதற்கு இயேசுவிடம் வரம் கேட்போம் என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதன்மூலம் திருஅவை மேலும் அதிகமான, அழகான சான்றை மக்களுக்கு வழங்கும், இறைமக்களையும், திருஅவையையும் பார்ப்பவர்கள் நம்மிடம் வரும் ஆவல் கொள்வார்கள் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.