2013-10-01 16:40:24

திருஅவையின் நிர்வாகத்தில் திருத்தந்தைக்கு உதவும் எட்டுக் கர்தினால்கள் குழுவின் கூட்டம்


அக்.,01,2013. கத்தோலிக்கத் திருஅவையின் நிர்வாகத்தில் தனக்கு உதவுவதற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள எட்டுக் கர்தினால்கள் அடங்கிய குழு, இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் தனது மூன்று நாள் கூட்டத்தைத் தொடங்கியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இக்கர்தினால்கள் குழு தொடங்கியுள்ள இக்கூட்டம் குறித்து நிருபர் கூட்டத்தில் விளக்கிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள், இக்குழுவின் ஆலோசனைகள் திருஅவையை நிர்வகிப்பதற்குப் புதிய ஊக்கத்தை அளிக்கும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை குழுவுக்குள்ளேயே எண்பது அறிக்கைகள் விநியோகிக்கப்ப்ட்டுள்ளன எனவும், கடந்த சில மாதங்களாக இக்குழுக்களின் உறுப்பினர்கள் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்களை நடத்தினர் எனவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் நாட்டின் நிர்வாகத் தலைவர் கர்தினால் Giuseppe Bertello; சிலே நாட்டின் சந்தியாகோவின் முன்னாள் பேராயர் கர்தினால் Francisco Javier Errazuriz Ossa; மும்பை பேராயர் கர்தினால் Oswald Gracias; ஜெர்மனியின் மியூனிச் மற்றும் ஃப்ரெய்சிங் பேராயர் கர்தினால் Reinhard Marx; காங்கோ குடியரசின் கின்ஷாசா பேராயர் கர்தினால் Laurent Monsengwo Pasinya; அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாஸ்டன் பேராயர் கர்தினால் Sean Patrick O'Malley; ஆஸ்திரேலியாவின் சிட்னி பேராயர் கர்தினால் George Pe ll; ஹொண்டுராஸ் நாட்டின் தெகுசிகால்பா பேராயர் கர்தினால் Oscar Andres Rodriguez Maradiaga; ஆகியோர் இக்குழுவில் உள்ளனர்.
மேலும் இக்குழுவின் செயலராக இத்தாலியின் அல்பானோ ஆயர் மார்செல்லோ செமெராரோ செயல்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.