2013-09-28 15:28:30

திருத்தந்தை பிரான்சிஸ் : மறைக்கல்வி ஆசிரியர்கள் கிறிஸ்துவின் பெயரால் பிறரை அணுக வேண்டும்


செப்.,28,2013. மறைக்கல்வி ஆசிரியர்கள் தினத்தையொட்டி இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான் பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், உலகெங்கிலுமிருந்து வந்திருந்த 1,600க்கு மேற்பட்ட மறைக்கல்வி ஆசிரியர்களை இவ்வெள்ளி மாலை வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், நல்ல மறைக்கல்வி ஆசிரியர்களாக வாழ விரும்பினால் மூன்று காரியங்களைப் பின்பற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
முதலாவதாக, இயேசுவை அறிந்து அவரோடு நெருங்கிய உறவு கொண்டிருக்க வேண்டும், இரண்டாவதாக, இயேசுவைப் போன்று செயல்பட வேண்டும், அதாவது நற்செய்தியை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும், மூன்றாவதாக, தங்களது சுகமான வசதிகளை விட்டுச்செல்லப் பயப்படக்கூடாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்துவை அன்புகூர்ந்து, தங்களது அன்றாட வாழ்வில் நற்செய்தியை வாழ்ந்து, சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் துணிச்சலுடன் சென்று விசுவாசம் எனும் கொடையை பிறருக்கு வழங்கும் நல்ல மறைக்கல்வி ஆசிரியர்கள் திருஅவைக்குத் தேவைப்படுகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மறைக்கல்வி ஆசிரியர்கள் திருஅவைக்கு ஆற்றும் பணிக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், மறைக்கல்வி ஆசிரியராக இருப்பது ஒரு வேலையோ அல்லது ஒரு பதவியோ அல்ல, மாறாக, இது ஓர் அழைப்பு என்றும் கூறினார்.
இந்த மூன்று காரியங்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லி விளக்கியபோது பலர் குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தனர்.
இம்மறைக்கல்வி ஆசிரியர்கள், நற்செய்தியை புதிய முறையில் அறிவிப்பதை ஊக்குவிக்கும் திருப்பீட அவை நடத்திய மூன்று நாள் அனைத்துலக கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.