2013-09-28 15:26:42

திருத்தந்தை பிரான்சிஸ் : திருமணத்தின் இன்னல்நிறைந்த தருணங்களின் அனுபவங்கள் அன்புப் பாதையை மேலும் உறுதிப்படுத்துகின்றது


செப்.,28,2013. ஒவ்வொரு திருமணமும் இன்னல்நிறைந்த தருணங்களைக் கொண்டுள்ளது. ஆயினும் இந்தச் சிலுவையின் அனுபவங்கள் அன்பின் பாதையை மேலும் உறுதிப்படுத்துகின்றன என்று இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Pope Francis ‏@Pontifex_en என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், உறுதியான திருமணத்தின் சிறப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 33 நாள்களே திருஅவையில் தலைமைப்பணியாற்றிய திருத்தந்தை முதலாம் ஜான் பால் இறந்ததன் 35ம் ஆண்டு இச்சனிக்கிழமையன்று நினைவுகூரப்பட்டது.
திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள் தனது 66வது வயதில், 1978ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி காலையில் இறைவனடி சேர்ந்தார்.
இன்னும், புனித பிரான்சிஸ் அசிசி இத்தாலியின் ரிமினியைக் கடந்து சென்றதன் 800ம் ஆண்டையொட்டி அந்நகரில் இடம்பெற்றுவரும் விழாவுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் செய்தி அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.
ரிமினியில் நடைபெறும் இந்த மூன்று நாள் விழா இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.