2013-09-27 15:56:39

திருத்தந்தை பிரான்சிஸ் : ஓர் உண்மையான கிறிஸ்தவர், இகழ்ச்சிகளை மகிழ்வோடும் பொறுமையோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும்


செப்.,27,2013. நாம் நமக்கு ஏற்படும் இகழ்ச்சிகளை எவ்வளவு மகிழ்வோடும் பொறுமையோடும் ஏற்றுக்கொள்கிறோமோ, அதுவே நாம் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதற்குச் சான்றாகும் என்று இவ்வெள்ளியன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவ வாழ்வில் தியாகங்கள் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
தன்னை யார் என்று மக்கள் சொல்கிறார்கள் என இயேசு கேட்கும் புனித லூக்கா நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு தம் சீடர்களுக்குத் தமது பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்புப் பற்றி எடுத்துச் சொன்னார், ஆனால் புனித பேதுரு இதைக் கேட்டுப் பயந்தார் என்று விளக்கினார்.
மேலும், இத்தகைய துன்பங்கள் இடம்பெறவே கூடாது என்று இயேசுவிடம் சொன்ன பேதுரு பல கிறிஸ்தவர்கள் போன்று இடருக்கு உள்ளானார் என்றும் கூறினார் திருத்தந்தை.
பல கிறிஸ்தவர்கள் சிலுவையின் பாதையைப் பின்செல்வதற்கு சிலுவையின் இடர் அவர்களைத் தடை செய்து வருகிறது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், உண்மையான கிறிஸ்தவர்கள், தங்களுக்கு நேரிடும் இகழ்ச்சிகளை மகிழ்வோடும் பொறுமையோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிலுவைவழி சென்ற இயேசுவை நெருங்கிப் பின்செல்வது நாம் ஒவ்வொருவரையும் பொருத்தது என்றும் திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.