2013-09-27 15:30:25

செப்.28, 2013. கற்றனைத்தூறும்........... நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity)


நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity) என்கிறோம்.
நமது உடலில், இயற்கையான எதிர்ப்புச் சக்தி (Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity), உடன்பாட்டு எதிர்ப்புச் சக்தி (Passive Immunity) என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன.
இயற்கையான எதிர்ப்புச் சக்தி என்பது, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்குத் தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்புச் சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை, உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல்படுகின்றன. அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக்கிருமிகளைத் தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்புச் சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்புச் சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytes என்ற இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.
மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்புச் சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு, தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டனஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.
நோய்க் கிருமிகள் நுழையும்போது, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்புச் சக்தி தோல்வியடையும்போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன.
காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது.

ஆதாரம் : பணிப்புலம்








All the contents on this site are copyrighted ©.