2013-09-27 16:05:45

சுற்றுலா மேற்கொள்பவர்கள் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்க ஐ.நா. பரிந்துரை


செப்.,27,2013. சுற்றுலா மேற்கொள்பவர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வைக் கொண்டிருக்கவும், தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்கவும் வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
இவ்வெள்ளியன்று அனைத்துலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், தண்ணீரைக் கவனமுடன் நிர்வகிப்பதில் சுற்றுலா நிறுவனங்களுக்கு இருக்கும் பொறுப்பையும், கடமையையும் சுட்டிக்கட்டியுள்ளார்.
மேலும், உலக அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றபோதிலும், 2012ம் ஆண்டில் நூறு கோடிக்கு மேற்பட்டவர்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இவ்வெண்ணிக்கை 2011ம் ஆண்டில் 98 கோடியாக இருந்தது என, ஐ.நா. சுற்றுச்சூழல் நிறுவனம் (UNWTO) கூறியுள்ளது.
2013ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 49 கோடியே 40 இலட்சமாக உள்ளது. இது, 2012ம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் இருந்த எண்ணிக்கையைவிட 5 விழுக்காடு அதிகம். மேலும், தென்கிழக்கு ஆசியாவில் இந்த 2013ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 விழுக்காடு அதிகம் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 27 அனைத்துலக சுற்றுலா தினமாகும்.
UNWTO என்ற ஐ.நா. சுற்றுச்சூழல் நிறுவனத்தில் 156 நாடுகள் உறுப்புக்களாக உள்ளன.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.