2013-09-27 16:05:59

கத்தார் கால்பந்து அரங்கக் கட்டுமானப் பணிகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்


செப்.,27,2013. கத்தாரில் 2022ம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டு அரங்கக் கட்டுமானப் பணிகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக நேபாளிகள், கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்தப் பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை குறித்து வெளியாகியுள்ள ஒரு புலனாய்வு அறிக்கை தங்களைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று FIFA எனப்படும் அனைத்துலகக் கால்பந்து விளையாட்டு அமைப்பினர் கூறியுள்ளனர்.
நேபாளத்திலிருந்து வேலைக்காக கத்தார் நாட்டுக்கு வந்துள்ளவர்கள் மிகவும் மோசமான வகையில் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்றும் FIFA அமைப்பு கூறியுள்ளது.
இலண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகையில், இந்தக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாளத் தொழிலாளர்கள் பெருமளவுக்கு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, கத்தார் அரசு இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இக்கட்டுமானப் பணிகளில் இரண்டு மாதங்களில் 44 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

ஆதாரம் : BBC/Express







All the contents on this site are copyrighted ©.