2013-09-26 15:39:40

"மனிதப் பிறவியை, கடவுள் பெண்ணிடம் ஒப்படைக்கிறார்" - பொதுநிலையினர் பணி திருப்பீட அவையின் கருத்தரங்கு


செப்.26,2013. பெண்மை என்ற பண்பு இறைவாக்கினை இவ்வுலகிற்கு அறிவிப்பதில் தனி இடம் பெறுகின்றது என்று பொதுநிலையினர் பணி திருப்பீட அவை கூறியுள்ளது.
வருகிற அக்டோபர் மாதம் 10, 11 ஆகிய தேதிகளில், உரோம் நகரில் நடைபெறவிருக்கும் ஒரு கருத்தரங்கைக் குறித்து, பொதுநிலையினர் பணி திருப்பீட அவை வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில், "மனிதப் பிறவியை, கடவுள் பெண்ணிடம் ஒப்படைக்கிறார்" என்பது இக்கருத்தரங்கின் மையப்பொருளாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'பெண்களின் மாண்பு' என்று பொருள்படும் ‘Mulieris dignitatem’ என்ற சுற்றுமடலை, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள், மரியன்னையின் ஆண்டான 1988ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று வெளியிட்டார்.
இச்சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், பொதுநிலையினர் பணி திருப்பீட அவை இக்கருத்தரங்கை நடத்துகிறது.
சமுதாயம், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் என்ற பல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு கூடிவருவதைக் காணும் இக்காலக் கட்டத்தில், இன்னும் ஆண்-பெண் என்ற இருபால் உறவில் சமத்துவம் உருவாகாமல் இருப்பது இக்கருத்தரங்கில் பேசப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.