2013-09-26 15:37:26

இயேசுவை அறிந்துகொள்ள அறிவு, இதயம், செயல்கள் என்ற மூன்று மொழிகள் தேவை - திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.26,2013. இயேசுவை அறிந்துகொள்ள 'முதல் தரமான' அறிவைவிட, ஒவ்வொருநாள் வாழ்வில் அவருடன் நாம் ஆழ்ந்த வகையில் ஈடுபடுவதால் உருவாகும் அனுபவமே தலைச்சிறந்ததென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வியாழன் காலை, புனித மார்த்தா சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், இயேசுவை அறிந்துகொள்ள அறிவு, இதயம், செயல்கள் என்ற மூன்று மொழிகள் தேவை என்று திருத்தந்தை மறையுரை வழங்கினார்.
இவ்வியாழன் வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில் (லூக்கா 9: 7-9) ஏரோது தன் அறிவுப் பசியை மட்டும் தீர்த்துக்கொள்ளும் வகையில், இயேசு யார் என்று தெரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகள், மேலோட்டமாக அமைந்தன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இத்தகைய அறிவைவிட, இயேசுவுடன் ஆழ்ந்ததொரு உறவில் ஈடுபடும்போது உருவாகும் அறிவே தலைசிறந்ததேனக் கூறினார்.
மறைக்கல்வி வழியாக நம் அறிவை மட்டும் நிரப்பிய இயேசு போதாது, நம் செபங்கள் வழியாக அவரை மனதார உணர்வதற்கும் முயற்சிகள் செய்யவேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
அறிவு, மனம் இவை இரண்டையும் தாண்டி, நாம் தெருவில் நடக்கும்போது, இயேசுவை நம் செயல்பாடுகளில் உணர்வதும், வெளிப்படுத்துவதும் மிக உயர்ந்த அறிவு என்று திருத்தந்தை தன் மூன்றாவது கருத்தை வெளிப்படுத்தினார்.
ஈடுபாடு ஏதுமில்லாமல், இயேசுவைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டு நம் அறிவை மட்டும் நிரப்புவது ஆபத்தானது என்ற தெளிவையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வெளிப்படுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.