2013-09-26 15:41:39

அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு மேலும் நிதியுதவிகள் தேவை – ஐ.நா.


செப்.,26,2013. அனைத்துச் சிறாருக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கு உறுதியான தலைமைத்துவமும், நிதியுதவியும் அவசியம் என்று ஐ.நா. கூட்டம் ஒன்றில் வலியுறுத்தப்பட்டது.
‘உலகளாவிய கல்வி முதல் முயற்சி’ என்ற விருதுவாக்குடன் கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்ட நடவடிக்கை குறித்துப் பரிசீலிப்பதற்கென நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் இப்புதனன்று கூட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இவ்வாறு கூறினர்.
இன்றும் உலகில் ஏறக்குறைய 5 கோடியே 70 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லாமலும், தரமான கல்வி வழங்கப்படாததால் 25 கோடிச் சிறார் கல்வியறிவின்றியும் உள்ளனர் என இக்கூட்டத்தில் அறிவித்தார் யுனெஸ்கோ இயக்குனர் இரினா போக்கோவா.
பல நாடுகளில் பள்ளிக்குச் செல்லும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், பாதியிலேயே படிப்பை நிறுத்தும் சிறாரின் எண்ணிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத அளவு உயர்ந்திருப்பதாகவும் போக்கோவா மேலும் தெரிவித்தார்.
அனைத்துச் சிறாரும் பள்ளி செல்லவும், கற்கும் திறனை மேம்படுத்தவும், உலகளாவிய குடியுரிமையை ஊக்குவிக்கவுமென ‘உலகளாவிய கல்வி முதல் முயற்சி’ என்ற நடவடிக்கையை கடந்த ஆண்டில் தொடங்கி வைத்தார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.