2013-09-25 16:31:19

மதச் சுதந்திரம் இவ்வுலகில் நிறைவேறாமல் இருப்பது, நமது கலாச்சார வளர்ச்சியில் ஒரு பின்னடைவே - கர்தினால் பெர்தோனே


செப்.25,2013. பேரரசர் Constantine காலத்தில் கட்டப்பட்டு, இன்னும் நிலைத்து நிற்கும் புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் அமர்ந்து, கிறிஸ்தவ அகழ்வியல் குறித்து சிந்திப்பது பொருத்தமாகத் தெரிகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 22 கடந்த ஞாயிறு முதல், வருகிற சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறும் 16வது அகில உலக கிறிஸ்தவ அகழ்வியல் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு, இச்செவ்வாய் மாலை புனித லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி ஆற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்த்தோனே அவர்கள் இவ்வாறு கூறினார்.
பேரரசர் Constantine மத வழிபாட்டுத் தலங்களை மட்டுமல்ல, மாறாக, மதச் சுதந்திரம் என்ற ஆணையின் வழியாக, மத நம்பிக்கையையும் இவ்வுலகில் கட்டியெழுப்பினார் என்று கர்தினால் பெர்த்தோனே அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
கற்களால் எழுப்பப்படும் ஆலயங்கள் நாம் எழுப்பவேண்டிய ஆன்மீக ஆலயங்களின் ஓர் எடுத்துக்காட்டு என்றும், நாம் எழுப்பும் இந்த ஆலயத்தின் மூலைக்கல்லாக கிறிஸ்து விளங்கவேண்டும் என்றும் கர்தினால் பெர்த்தோனே அவர்கள் எடுத்துரைத்தார்.
17 நூற்றாண்டுகளுக்கு முன்னர் பேரரசர் Constantine வழங்கிய மதச் சுதந்திரம் இன்னும் இவ்வுலகில் முற்றிலும் நிறைவேறாமல் இருப்பது, நமது இன்றையக் கலாச்சார வளர்ச்சியில் ஒரு பின்னடைவே என்பதையும் கர்தினால் பெர்த்தோனே அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.