2013-09-25 16:32:32

பெஷாவர் நகரில் தாக்குதலுக்குள்ளான அனைத்துப் புனிதர்கள் கிறிஸ்தவக் கோவிலில் பல்சமய வழிபாடு


செப்.25,2013. பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் அனைத்துப் புனிதர்கள் கிறிஸ்தவக் கோவிலில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பின், இச்செவ்வாயன்று அக்கோவிலில் பல்சமய வழிபாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
34 பெண்கள், 7 குழந்தைகள் உட்பட 82 பேர் உயிர் இழந்ததற்கும், 145 பேர் காயமடைந்ததற்கும் காரணமாக அமைந்த தற்கொலைப் படையினரின் இத்தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பலவேறு நகரங்களில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இணைந்து அமைதி ஊர்வலங்களையும், செபங்களையும் மேற்கொண்டனர் என்று Fides செய்திக் குறிப்பு கூறுகிறது.
இத்தாக்குதலின் முழு உண்மையைக் கண்டறிவது அரசின் கடமை என்றும், கிறிஸ்தவர்கள் இந்நிகழ்ச்சியை அடுத்து அமைதி காக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் தலைவர் பேராயர் Joseph Coutts அவர்கள் கூறியுள்ளார்.
1883ம் ஆண்டு பெஷாவரில் கட்டப்பட்ட அனைத்துப் புனிதர்களின் ஆலயம், இஸ்லாமியத் மசூதிகளைப் போலவே கட்டப்பட்டுள்ளது என்றும், கிறிஸ்தவ இஸ்லாமிய நல்லுறவை வளர்க்கும் வண்ணம் கட்டப்பட்ட இந்த ஆலயமும் ஏனைய இஸ்லாமிய மசூதிகளைப் போலவே Meccaவை நோக்கியவண்ணம் கட்டப்பட்டுள்ளது என்றும் ICN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / ICN / AsiaNews








All the contents on this site are copyrighted ©.