2013-09-25 16:32:00

நோய்களைக் குணமாகும் வழிகள், அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் கிடைக்கவேண்டும், பேராயர் Zimowski


செப்.25,2013. மனித சமுதாயத்தில் காணப்படும் பொதுவான அல்லது அரிதான நோய்கள் அனைத்திலிருந்தும் குணமாகும் வழிகள், அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் கிடைக்கவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அரிதான நோய்களை மையப்படுத்தி, செப்டம்பர் 25, இப்புதனன்று உரோம் நகரில் நடைபெற்ற ஒரு மருத்துவக் கருத்தரங்கில், நலப்பணியாளர்கள் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
தகுதி, வயது, நலமற்ற நிலை என்ற பல காரணிகளின் அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளும் வேறுபடுவதைக் குறித்து பல்வேறு திருத்தந்தையர் வருத்தம் தெரிவித்துள்ளனர் என்பதை பேராயர் Zimowski அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
மருத்துவத் துறை இலாபத்தின் அடிப்படையில் செயல்படுவதை விடுத்து, மக்களைக் காக்கும் பணியில் இன்னும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்ற கருத்தை, திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்பதையும் பேராயர் Zimowski அவர்கள் எடுத்துரைத்தார்.
வயது முதிர்ந்தோர் மற்றும் நரம்பு தொடர்பான நோயுற்றோர் ஆகியோரை மையப்படுத்தி, இவ்வாண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி முதல் 23ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள பேராயர் Zimowski அவர்கள், அங்கிருந்தோர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.