2013-09-25 16:19:57

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


செப்.25,2013. கோடைகாலம் முடிந்து குளிர்காலத்திற்கு முன்னான இலையுதிர்காலத்தை இத்தாலியின் வடபகுதிகள் அனுபவித்துக்கொண்டிருக்க, தலைநகரான உரோம் நகரோ இன்னும் கோடைகாலத்தின் இதமான சூட்டை அனுபவித்துவருவதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொதுமறைபோதகமும் தூய பேதுரு பசிலிக்கா பேராலய திறந்த வளாகத்திலேயே இடம்பெற்றது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் இதில் கலந்துகொள்ள வருவதும் இதற்கு ஒரு காரணம்.
இப்புதன் பொதுமறைபோதகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கர்கள் தங்கள் விசுவாச அறிக்கையில் வெளிப்படுத்தும் 'ஒரே திருஅவையின் மீதான நம்பிக்கை' குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். உலகம் முழுவதும் திருஅவையின் அங்கத்தினர்களாக இருக்கும் பல்வேறு மக்கள், கலாச்சாரங்கள், மொழிகள் ஆகியவைகளின் வளமையான பன்முகத்தன்மையை நோக்கும்போது, நமது பொதுத் திருமுழுக்கு, திருஅவை மீதான விசுவாசத்திலும் திருவருள்சாதன வாழ்விலும் பகிர்வு போன்றவைகளில் தன் மூலத்தைக் கொண்டுள்ள ஒன்றிப்பு என்பது இறைவன் வழங்கும் கொடையே.
மிகப்பெரிய குடும்பம்போல் நாம் அனைவரும் கிறிஸ்துவில் நம் சகோதர சகோதரிகளோடு ஒன்றிணைந்து உள்ளோம். திருஅவையுடன் ஆன ஒன்றிப்பில் பெறப்படும் இந்த நம் ஒன்றிப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் உண்மைதன்மை குறித்து நாம் நம் வாழ்வில் குறிப்பாக நம் செபங்களில் எவ்வளவு தூரம் உணர்ந்து பாராட்டி வெளிப்படுத்துகிறோம் என்பது குறித்து நாம் நம்மையே கேட்கவேண்டும்.
மனிதகுல குடும்பம் அனைத்திற்குமான அமைதி, ஒப்புரவு மற்றும் ஒன்றிப்பினை வழங்கும் இறைத்திட்டத்திற்கு நாம் சாட்சியம் வழங்கவேண்டியது இவ்வுலகிற்குத் தேவையாக உள்ளது. நம் பதட்டநிலைகளையும் பிரிவினைகளையும் மேற்கொள்ள உழைக்கவும், தூய பவுல் நம்மிடம் கேட்பதுபோல் அமைதி எனும் இணைப்பில் உணர்வுகலந்த ஒன்றிப்பை நிலைநிறுத்தவும், நம்முடைய பன்மைத்தன்மையின் வளத்திலிருந்து தூய ஆவி உருவாக்கும் இணக்கவாழ்வை நெஞ்சில் நிறுத்திச் சீராட்டவும் நம்மைத் தூண்டுமாறு இறைவனை நோக்கி வேண்டுவோம். இவ்வாறு தன் புதன்பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அங்கு கூடியிருந்த அனைவருக்கும், குறிப்பாக இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, டென்மார்க, நார்வே, தென்னாப்ரிக்கா, உகாண்டா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா, சீனா, ஜப்பான், இலங்கை, தென்கொரியா, வியட்நாம், கானடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வந்திருந்த அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தன் வாழ்த்துக்களையும் வழங்கினார். புதன் பொதுமறைபோதகத்தின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.