2013-09-24 15:40:28

விவிலியத்
தேடல் 'வீட்டுப் பொறுப்பாளர்' உவமை பகுதி 3


RealAudioMP3 'வீட்டுப் பொறுப்பாளர்' உவமைக்கும், அதைத் தொடர்ந்து இயேசு கூறிய அறிவுரைகளுக்கும் பரிசேயர் அளித்த பதிலைச் சிந்திப்போம் என்று சென்றவாரம் நம் தேடலை நிறைவுசெய்தோம். ஆயினும் என்னை வந்தடைந்த ஒரு மின்னஞ்சல் நம் தேடலை வேறு திசையில் திருப்பிவிட்டது. இந்தத் திருப்பம் நமக்குப் பயன்தரும் திருப்பம் என்ற நம்பிக்கையில் இன்றையத் தேடலைப் புதியத்திசையில் தொடர்கிறோம்.
இந்தியாவில், இன்னும் ஏழு மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. பல்வேறு கட்சிகள் அரசியல் கணக்குகளை முழுவீச்சில் மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில், எனக்கு வந்த மின்னஞ்சல் வேறு கணக்குகளைச் சிந்திக்க வைத்தது. இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மக்களாகிய நாம் கணக்கு கேட்கவேண்டும் என்ற பாணியில் இந்த மின்னஞ்சலில் கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன.
நேர்மையற்ற முறையில் நடந்துகொண்ட வீட்டுப் பொறுப்பாளரிடம் 'கணக்கை ஒப்படைக்கச்' சொல்லி செல்வர் கேட்டார் என்ற கருத்துடன் இவ்வுவமை துவங்குகிறது. வரவிருக்கும் தேர்தலுக்குமுன், பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மக்களாகிய நாம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்பதை இவ்வரிகள் நமக்கு நினைவுறுத்துகின்றன.

வீட்டுப் பொறுப்பாளர் உவமை வார்த்தைக்கு வார்த்தை இந்திய நாட்டுடன் பொருந்தி வருவதைப்போல உணர்கிறேன். இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் மக்களின் வாக்குகளைப் பெற்று நாட்டின் பொறுப்பாளர்களாக மாறும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொருந்திவரும் உவமை இது. 'வீட்டுப் பொறுப்பாளர்' என்ற அடைமொழிக்குப் பதில், 'நாட்டுப் பொறுப்பாளர்' அதாவது, 'பாராளுமன்ற உறுப்பினர்' என்ற அடைமொழியைப் பொருத்திப்பார்த்தால், இந்த உவமையில் வரும் அனைத்தும் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் பலருக்குப் பொருந்திவருவதை உணரலாம். எடுத்துக்காட்டாக, இவ்வுவமையின் முதல் இரு இறைச் சொற்றொடர்களை எடுத்துக்கொள்வோம்.

லூக்கா நற்செய்தி 16: 1-2
செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு, 'உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறினார்.

இந்த முதல் இரு இறைச் சொற்றொடர்களை இன்றைய இந்தியச் சூழலுக்கு ஏற்றதுபோல் மாற்றி வாசிக்கும்போது இவ்வரிகள் பின்வரும் வகையில் ஒலிக்கும்:

இந்திய அரசுப்பணிக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுப் பொறுப்பாளர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் அரசின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்கள் மீது பழி சுமத்தப்பட்டது. இந்திய அரசு அவர்களைக் கூப்பிட்டு, "உங்களைப்பற்றி நாங்கள் கேள்விப்படுவது என்ன? உங்கள் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையுங்கள். நீங்கள் இனி நாட்டுப் பொறுப்பாளர்களாய் இருக்க முடியாது என்று அவர்களிடம் கூறியது.
2000 ஆண்டுகளுக்கு முன் இயேசு கூறிய அந்த உவமை தற்போது இந்தியச் சூழலில், சொல்லப்போனால் உலகச் சூழலில் உள்ள அனைத்து நாட்டுப் பொறுப்பாளர்களுக்கும் பொருந்தி வருகிறது என்பது தெளிவுதானே?

வீட்டுப் பொறுப்பாளரையும் நாட்டுப் பொறுப்பாளர்களையும் இணைத்துச் சிந்திக்க முயல்வோம். தான் பதவியிலிருந்து நீக்கப்படப் போவதை உணரும் வீட்டுப் பொறுப்பாளர், தன் எதிர்காலத்தைப்பற்றிச் சிந்திக்கிறார். உடல் உழைப்பால் தான் காலம் தள்ளமுடியாது என்று புரிந்து கொள்கிறார். மற்றொரு வழி, பிச்சை எடுப்பது ஒன்றுதான் என்பதும் அவருக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதற்கு அவரது தன்மானம் இடம்தரவில்லை. இதில் என்ன வேடிக்கை என்றால், ஏமாற்றிப் பிழைப்பதில் தான் இழக்காத தன்மானத்தை, பிச்சை எடுப்பதால் இழந்துவிடுவோம் என்ற பயம் இவருக்கு.
எனவே, அவருக்குத் தெரிந்த, பழக்கமான பழைய வழியிலேயே அவரது சிந்தனை ஓடுகிறது. தன் முதலாளியிடம் கடன்பட்டவர்களை வரவழைத்து, கணக்கை மாற்றி எழுதச்செய்து, அவர்களை, தனக்குக் கடன்பட்டவர்களாக மாற்றிவிடுகிறார். இவர் நேர்மையற்ற முறையில் சிந்தித்து, செயல்பட்டார் என்பது தெரிந்தும், அவர் முன்மதியோடு செயல்பட்டார் என்று வீட்டு உரிமையாளர் அவரைப் பாராட்டுகிறார். உவமை இவ்விதம் முடிகிறது.

வீட்டுப் பொறுப்பாளருக்குப் பதில், இதோ, நாட்டுப் பொறுப்பாளர்களின் கதை... இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களின் உடைமைகளைப் பாழாக்கியதாக பலமுறை கேட்டுவந்தோம். எனினும் இந்திய அரசு அவர்களைக் கூப்பிட்டு, கணக்கு கேட்டதாகவோ, பதவி நீக்கம் செய்ததாகவோ, அல்லது, அவர்களாகவே பதவியைவிட்டு விலகியதாகவோ நாம் கேள்விப்படவில்லை.
இன்னும் ஆறு அல்லது, ஏழு மாதங்களில் இந்தியா என்ற வீட்டின் உரிமையாளர்கள் என்று ஏட்டளவில் அழைக்கப்படும் நாம், நாட்டுப் பொறுப்பாளர்களைப் பதவிநீக்கம் செய்யப் போகிறோம். இந்நேரத்தில் இவர்கள் மனங்களில் எவ்வகை எண்ணங்கள் ஓடும்? தாங்கள் இழக்கும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை மீண்டும் அடைவதற்கு பெரும்பாலானோர் தங்கள் முயற்சிகளை ஏற்கனவே துவங்கிவிட்டனர். மீண்டும் பதவிக்கு வரமுடியாத அளவு குற்றங்களைக் குவித்துள்ளவர்கள், கடந்த 5 ஆண்டுகளில் இவர்களிடம் தவறான வழிகளில் சலுகைகள் பெற்றவர்களிடம் மறைமுகமான ஒப்பந்தங்களை மேற்கொள்வர். குறுக்கு வழிகளில் சலுகைகள் பெற்ற இவர்கள், உண்மையில் இந்திய நாட்டிற்குக் கடன்பட்டவர்கள். மீண்டும் இந்தியாவுக்கு அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல், தங்களுக்குச் சலுகைகள் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவர்கள் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருப்பர்.

"நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார்" (லூக்கா 16: 8) என்று இந்த உவமையின் இறுதியில் நாம் வாசிக்கும்போது, வீட்டின் உரிமையாளர் நடந்துகொண்ட விதம் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது, கோபமடைய வைக்கிறது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகள் நடந்தது என்ன? நேர்மையற்ற நாட்டுப் பொறுப்பாளர்களை பல்வேறு தவறான காரணங்களுக்காக இந்திய அரசு பாராட்டியுள்ளது.
2014ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல்கள் நெருங்கும்போது, நேர்மையற்ற நாட்டுப் பொறுப்பாளர்களைப் பற்றி நாட்டின் உரிமையாளர்களாகிய நாம் என்ன செய்யப்போகிறோம்? நம்மில் சிலர் இந்தப் பிரச்சனையே வேண்டாம் என்று ஒதுங்கிவிடுவோம். வேறு சிலர், தேர்தல் நேரத்தில் கிடைக்கும் பலன்களைக் கணக்கிட்டு, நேர்மையற்ற நாட்டுப் பொறுப்பாளர்களை மீண்டும் தேர்ந்தெடுக்கப் போகிறோம்.

இந்தியாவிலும் சரி, வேறு எந்த நாட்டிலும் சரி, அரசியல் என்பது அழுக்கடைந்த ஒரு சாக்கடையாக மாறிவிட்டதால், அந்த நாற்றத்தைத் தாங்கமுடியாமல் நாம் விலகி விடுகிறோம். அல்லது, அந்த நாற்றத்தில் அதிக நேரம் நிற்காமல், யாரோ ஒருவரை அவசர அவசரமாகத் தேர்ந்தெடுத்துவிடுகிறோம். இதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்யமுடியும் என்ற விரக்திப் பேச்சையும் அடிக்கடி பேசிவருகிறோம்.
இந்தச் சாக்கடையைச் சுத்தம் செய்யமுடியாது என்று நமக்குள் உருவாகியிருக்கும் நம்பிக்கையற்ற எண்ணங்களை முதலில் நீக்க முயல்வோம். இப்படிப்பட்ட நம்பிக்கையற்ற எண்ணங்களைப் பரப்புவதற்குப் பதிலாக, அரசியலை எவ்விதம் சீரமைக்க முடியும் என்ற சிந்தனைகளை உருவாக்குவோம். நமக்குத் தெரிந்த பல வழிகளில் இவ்வெண்ணங்களைப் பகிர்வோம். நம்பிக்கையை வளர்ப்போம்.

இந்த நம்பிக்கை முயற்சியை இதோ, நான் ஆரம்பித்துவைக்கிறேன். இத்தேடலின் துவக்கத்தில் நான் குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலில் கூறப்பட்ட கருத்துக்களைப் பகிர விழைகிறேன். இந்தியாவின் பாட்னா நகரில் சேவியர் சமுதாய ஆய்வு மையம் என்ற நிறுவனத்தை நடத்திவரும் அருள்பணியாளர் Jose Kalapura என்பவர் கூறிய இக்கருத்துக்கள் இவை. இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களைச் சீரமைக்கும் ஏழு அம்சத் திட்டம் என்ற தலைப்பில் இந்த மின்னஞ்சல் வந்திருந்தது. இந்தியா என்ற வீட்டுக்குப் பொறுப்பாளர்களாக நாம் தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்றவேண்டிய ஏழு அம்சத் திட்டம் இதோ:
    தங்கள் பணிக் காலத்தில் மட்டும் ஊதியம் பெறலாம். பதவி முடிந்ததும் எவ்வித ஊதியமும் பெறக்கூடாது.
    ஏனைய இந்தியர்களைப் போலவே, அவர்களும் தங்கள் பணிஒய்வுத் திட்டங்களை வகுத்துக் கொள்ளவேண்டும்.
    பதவியில் இருக்கும்போது தங்கள் ஊதிய உயர்வுக்கென பாராளுமன்றத்தில் விவாதிப்பதோ, அந்த முடிவை நடைமுறைப்படுத்த ஓட்டளிப்பதோ கூடாது.
    பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தற்போது வழங்கப்படும் நலவாழ்வு திட்டங்கள் நிறுத்தப்படவேண்டும். அவர்களும், ஏனைய இந்தியர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களையே பெறவேண்டும்.
    குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்தல்களில் போட்டியிடக்கூடாது.
    பாராளுமன்றம் இந்தியக் குடிமக்கள் மீது சுமத்தும் அனைத்துச் சட்டங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்டுப்பட வேண்டும்.
    பழைய, மற்றும் தற்போதையப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பல்வேறு ஒப்பந்தங்கள் 2014ம் ஆண்டு சனவரி 1ம் தேதியன்று இரத்துச் செய்யப்படவேண்டும். இந்த ஒப்பந்தங்கள் இந்திய மக்களிடமிருந்து இவர்கள் பெற்ற ஒப்பந்தங்கள் அல்ல, இவற்றை இவர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டனர்.


இந்த மின்னஞ்சலின் இறுதியில் கூறப்பட்டுள்ள ஒரு கருத்து மனதில் ஆழமாய்ப் பதிந்தது. இம்மடலைப் பெறுகின்ற ஒவ்வொருவரும் இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை இன்னும் 20 பேருடன் பகிர்ந்தால், நாம் பல கோடி மக்களின் மனங்களில் இக்கருத்துக்களைப் பதிப்போம். ஒரு வாரக் காலத்தில் இக்கருத்துக்கள் இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் அடையும் வாய்ப்புண்டு.

உலகிலேயே மிகப் பெரிய, மிக, மிக, மிகப் பெரிய குடியரசு என்ற புகழைப் பெற்ற இந்திய நாடு, தேர்தலை மேற்கொள்ளும்போது இவ்வுலகின் கவனம் முழுவதும் அதன் மீது திரும்பும். அந்நேரம், நாம் தலை நிமிர்ந்து நம் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்தால், இவ்வுலகம் நம்மைக் கண்டு வியக்கும், நம்மைப் பின்பற்றும்.
இதெல்லாம் நடக்கக் கூடிய காரியம்தானா? ஏன் வீணாகக் கற்பனையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற கேள்விகள் எழலாம். இங்குதான் நமது போராட்டம் ஆரம்பமாகவேண்டும். நம்பிக்கை தரும் இந்தச் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளாமல், மாற்றங்களை உருவாக்க முயற்சிகள் செய்யாமல், நாம் விலகும்போது, வழக்கமான நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர்கள் மீண்டும் பாராளுமன்றத்தில் நுழைந்துவிடுவர். நாம் தோல்வியுற்று, துவண்ட மனதுடன் திரும்பவேண்டியிருக்கும்.

அடுத்த ஆறு மாதங்களில், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்தியா என்ற வீட்டுக்குப் பொறுப்பாளர்களாக வருவதற்கு யாருக்கு தகுதி உள்ளது, அல்லது தகுதி இல்லை என்பதைப் பற்றிய விவாதங்களை எழுப்புவோம். கட்சி, மதம், சாதி, மொழி என்ற அடிப்படையில் அரசியல் வாதிகள் தங்கள் தகுதிகளைப் பற்றிப் பேசும்போது, நாம் நன்னெறி விழுமியங்களின் அடிப்படையில், மக்களாட்சி என்ற உயர்ந்த இலட்சியத்தின் அடிப்படையில் நம் விவாதங்களை மேற்கொள்வோம். 'வீட்டுப் பொறுப்பாளர்' உவமையும், அதைத் தொடர்ந்து இயேசு கூறும் அறிவுரைகளும் நாட்டுப் பொறுப்பாளர்களைச் சீரமைக்க ஒரு வழியாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.