2013-09-24 15:39:29

போரினால் பல்லாயிரக்கணக்கான சிறாருக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டுள்ளது, ஐ.நா. எச்சரிக்கை


செப்.,24,2013. போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் தாக்கப்பட்டும், ஆயுதம் ஏந்திய மனிதரால் ஆக்ரமிக்கப்பட்டும் இருப்பதால், அந்நாடுகளில் ஏறக்குறைய 2 கோடியே 85 இலட்சம் சிறாருக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சிறார் பள்ளிக்கே செல்லாமல் இருக்கின்றனர் அல்லது இடையிலே படிப்பை நிறுத்தி விடுகின்றனர் என ஐ.நா.பொது அவையில் உரைத்த ஐ.நா.வின் யூனிசெப் செயல்திட்ட இயக்குனர் அந்தோணி லேக், இவ்விவகாரத்துக்கு உடனடியாகத் தீர்வு காணப்படுமாறு கேட்டுக்கொண்டார்.
போர்கள் முடியும்வரை கல்வியும், சிறாரும் காத்திருக்க முடியாது என்றும், போர்கள் முடியும்வரை நோய்கள் பரவாமல் இருக்காது என்றும் எச்சரித்த லேக், அனைத்துலக அளவில் இது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தினார்.
ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய 5 கோடியே 70 இலட்சம் சிறாரில் பாதிக்கும் மேற்பட்டோர் போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் உள்ளனர் என்றும் லேக் கூறினார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.