2013-09-23 15:16:27

வாரம் ஓர் அலசல் – தண்ணீரைக் காத்திட...


செப்.,23,2013. RealAudioMP3 கோபோ என்ற பெருந்துறவி ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்காமல், ஒவ்வோர் ஊராகச் சென்று கொண்டிருந்தவர். ஒருமுறை அவர் கடுமையான வெயிலில் நடந்து வந்தார். தாகம் அவரை வாட்டியது. அருகில் தெரிந்த ஊர் ஒன்றுக்குச் சென்று ஒரு வீட்டின்முன் நின்று, “அம்மா தாயே! தாகமாக இருக்கிறது, கொஞ்சம் தண்ணீர்க் கொடுத்தால் குடித்துவிட்டுச் செல்வேன்” என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெண் அவ்வீட்டிலிருந்து வெளியே வந்து, “சுவாமி, சிறிதுநேரம் காத்திருங்கள், நான் குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன்” என்று இனிமையாகச் சொல்லி குடத்துடன் சென்றார். நேரம் சென்றுகொண்டே இருந்தது. கோபோ பொறுமையிழந்தார். வரட்டும், நான் யார் என்று காட்டுகிறேன் என்று உள்ளுக்குள் பொறுமினார். இடுப்பில் தண்ணீர்க் குடத்துடன் மெதுவாக நடந்துவந்த அந்தப் பெண் வீட்டுக்குள் சென்று, பின்னர் ஒரு செம்பு நிறையத் தண்ணீர்க் கொண்டுவந்து கோபோவிடம் நீட்டினார். இதற்கா இவ்வளவு நேரம்? எனக் கோபமாகக் கேட்டார் துறவி. அதற்கு அந்தப் பெண், “ஐயா, இங்கு அருகில் தண்ணீர்த் தடாகம் எதுவும் இல்லை. இங்கிருந்து ஐந்து கல் தொலைவு சென்று தண்ணீர் எடுத்து வருகிறேன்” என்றார் கனிவுடன். அப்பெண்ணின் உடம்பெல்லாம் வியர்வையால் நனைந்திருந்ததை அப்போதுதான் கவனித்தார் கோபோ. உடனடியாக அவரின் கோபமும் மறைந்து, இந்தச் சுட்டெரிக்கும் வெயிலில் இவ்வளவு தொலைவு நடக்க வைத்துவிட்டோமே எனவும் வருந்தினார். அப்போது அப்பெண், “ஐயா, இங்கிருக்கும் எல்லாக் குளங்களும் வற்றிவிட்டன. இவ்வூரில் நாங்கள் தினமும் ஐந்து கல் தொலைவு சென்றுதான் தண்ணீர் எடுத்து வருகிறோம். நீங்கள் கேட்டபோது வீட்டில் தண்ணீர் இல்லை. அதனால்தான் அங்கேச் சென்று தண்ணீர்க் கொண்டுவந்தேன்” எனப் பணிவுடன் சொன்னார். இதைக் கேட்ட பெருந்துறவி கோபோ, அந்த ஊரின் நிலையைக் கண்டு வருந்தி அங்கேயே தபம் செய்து நீரூற்றை வரவழைத்தார், அவ்வூரின் தண்ணீர்ப் பஞ்சத்தையும் முற்றிலும் ஒழித்துவிட்டார் என்று சொல்லப்படுகின்றது.
கோபோ பெருந்துறவி போன்று யாரும் இக்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாட்டை அகற்றுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் இன்றும் மக்கள் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுப்பதும், வற்றிய ஆறுகளில் ஆழக்குழி தோண்டி, தேங்காய்ச் சிரட்டையால் குடங்களை நிரப்புவதும் இன்றும் பல கிராமங்களில் தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. வருகிற அக்டோபர் 28ம் தேதிக்கும் நவம்பர் 19ம் தேதிக்கும் இடைப்பட்ட நாள்களில் மங்கள்யான் என்ற செயற்கைக்கோளை ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து செவ்வாய்க்கோளுக்கு இந்தியா செலுத்தவிருப்பதாக விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தேவிப் பிரசாத் கார்னிக் தெரிவித்துள்ளார். இப்படி இந்தியா அறிவியலில் அசுரவேகம் கண்டுவருகின்றபோதிலும், நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சனையாகவே இருந்துவருகிறது. பொதுவாக நிலத்தை தோண்டினாலே தண்ணீர்க் கிடைக்கும் என்ற காலம் போய், இப்போது இரு மாநிலங்கள் தண்ணீருக்காக அடித்துக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள KTH Royal Institute of Technology என்ற பல்கலைக்கழகம், கைபேசி பேட்டரியை சார்ஜ் செய்ய சிறிது தண்ணீரை ஊற்றி சார்ஜ் அளிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளது. ஆக, ஆதிகாலம் முதல் இந்த நவீன கணினி உலகம்வரை தண்ணீர்தான் அனைத்துக்கும் ஆதாரமாக இருந்துவருகிறது. அதேசமயம் தண்ணீருக்கான மோதல்களும் உலகளவிலும், உள்நாட்டு அளவிலும் வலுத்துவருவதால், அடுத்து ஓர் உலகப்போர் ஆரம்பித்தால் அது தண்ணீருக்கானப் போராகத்தான் இருக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுவிட்டது.
ஐக்கிய நாடுகள் நிறுவனமும், நாடுகளின் தண்ணீர்ப் பற்றாக்குறை குறித்தும், சுத்தமான குடிநீரின்றி ஏற்படும் தடுத்துநிறுத்தக்கூடிய நோய்களால் பலர் இறப்பதையும் சுட்டிக்காட்டி வருகிறது. "சுற்றுலாவும் தண்ணீரும்: நமது பொதுவான எதிர்காலத்தைக் காப்பாற்ற" என்ற தலைப்பிலே, செப்டம்பர் 27, வருகிற வெள்ளிக்கிழமையன்று அனைத்துலக சுற்றுலா நாளையும் சிறப்பிக்கவுள்ளது ஐ.நா. நிறுவனம். இந்நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட குடியேற்றதாரர் அவைத் தலைவர் கர்தினால் அந்தோணியோ மரிய வேலியோ(Antonio Maria Vegliò), பொதுவாக, நீர்நிலைகள், கடற்கரைகள் என்று நீருள்ள பகுதிகளையே சுற்றுலாப் பயணிகள் நாடிச்செல்லும் வேளையில், அப்பகுதிகளில் உள்ள நீரை வீணாக்காமல் பயன்படுத்தும் வழிகளை, சுற்றுலாத் துறையினரும், பன்னாட்டு அரசுகளும் உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இன்னும் அதிகரிக்கும் என்றும், தற்போதைய தேவையைவிட 50 விழுக்காடு கூடுதலாக தண்ணீர்த் தேவை உயரும் என்றும், இதனால் உலக நாடுகள் அதற்கேற்ப ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்றும் பல ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இன்று உலகில் 50 விழுக்காட்டினர் நகரங்களில் வாழ்கின்றனர். மனிதரின் வாழ்வு முறைகளும் மாறி வருகின்றன. மனிதரின் வாழ்வில் சுற்றுலா ஒரு முக்கிய இடத்தை வகித்து வயதுவரம்பின்றி எல்லாருமே சுற்றுலா மேற்கொள்கின்றனர். 2012ம் ஆண்டில் மட்டும் அனைத்துலக அளவில் 135 கோடிப் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். உலக அளவில் இடம்பெறும் சுற்றுலாக்களால் நூறாயிரம் கோடி டாலரும், நாடுகளுக்குள்ளே இடம்பெறும் சுற்றுலாக்களால் 500 முதல் 600 கோடி டாலரும் வருமானம் கிடைக்கின்றது. சுற்றுலாப் பயணிகளால் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாடுகளுக்குப் பயன்கள் இருந்தாலும் அவர்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புக்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமென்றும், நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றும் ஐ.நா.சுற்றுலா நிறுவனம்(UNWTO) இவ்வாண்டில் சிறப்பாக வேண்டுகோள்விடுக்கின்றது. சுற்றுலா மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான மக்கள் தண்ணீர் உள்ள இடங்களையே அதிகம் நாடிச் செல்வதால் தண்ணீர் மாசடையாமல் காப்பாற்றப்பட வேண்டுமெனக் கேட்டுள்ளார் இந்நிறுவனத்தின் பொதுச்செயலர் Taleb Rifai. இக்காலத்தில் ஒரு பயணப் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும் நமது பொதுவான எதிர்காலத்தைக் காப்பாற்றுவோம் எனவும் Rifai வலியுறுத்தியுள்ளார்.
உலகின் பல நாடுகள் தங்களது மொத்த வருவாயில் 15 விழுக்காட்டுக்கு மேற்பட்ட வருவாயைச் சுற்றுலாக்களால் பெறுகின்றன. இவ்வாண்டின் சுற்றுலா நாள் கொண்டாடப்படவிருக்கும் மாலத்தீவுகள் மற்றும் Seychelles தீவுகள் 25 விழுக்காட்டுக்கு மேற்பட்ட வருவாயைப் பெறுகின்றன. Macauல் ஏறக்குறைய 50 விழுக்காட்டினருக்கு சுற்றுலாக்களே வேலைவாய்ப்புக்களை வழங்கியுள்ளன. உலகின் சில பகுதிகளில் சுற்றுலாக்கள் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்குப் பரவி வருவதால் அவை வெப்பநிலை மாற்றத்துக்கு முக்கிய பங்களிப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. கிரேக்க நாட்டின் சில தீவுகளுக்கு கப்பல் மூலம் குடிநீர் கொண்டு செல்ல வேண்டியிருக்கின்றது. உலகின் வெப்பநிலை மாற்றத்தால் ஆல்ப்ஸ் போன்ற பகுதிகளில் குளிர்காலம் குறைகின்றது. எனவே பனிச்சறுக்கு விளையாடவரும் பயணிகளுக்குச் செயற்கைப் பனிச்சறுக்கு அமைப்புக்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. இதற்குப் பெருமளவில் தண்ணீர் தேவைப்படுகின்றது. இதனால் உள்ளூர் மக்களுக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இந்தோனேசியாவின் Bali தீவில் உள்ளூர் மக்கள் ஒரு நாளில் பயன்படுத்தும் குடிநீரைவிட சுற்றுலாப் பயணிகள் 16 மடங்குக்கு அதிகமான நீரைப் பயன்படுத்துகின்றனர். 2025ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.
வளரும் நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற பணக்கார நாடுகள், தங்களது நாட்டுக் குளிர்பானங்களை அனைத்து மக்களுக்குமான பானமாக மாற்ற அந்தந்த நாடுகளில் உள்ள தண்ணீரை உறிஞ்சி நிலத்தடி நீரை நாசமாக்குகின்றன. அதேநேரம் இந்த நாடுகளின்மீது தங்களுக்கு எப்போதும் அக்கறை உள்ளது போன்றும் காட்டிக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் Robert Orris Blake வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதைக் கேட்டால் இது தெளிவாகப் புரியும். அவர் பேசியிருக்கிறார்....
மக்கள் தொகை பெருக்கம், நகரமயமாக்கல் ஆகியவற்றால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் என்பது இந்தியாவில் சவாலாக உருவெடுத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையே மோதல் மற்றும் எல்லைப் பிரச்னைகளுக்குத் தண்ணீர் ஒரு காரணமாக மாறி வருகிறது. இந்தியாவில் 12 விழுக்காட்டினருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. நாட்டில் மொத்தம் உள்ள 626 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை 2009ம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இந்தியாவின் தண்ணீர்த் தேவையில் 75 விழுக்காடு 3 மாதங்களில் பெய்யும் மழை மூலம் கிடைக்கிறது. ஆனால், அதை தேக்கிவைக்கப் போதுமான வசதிகள் இல்லை. நகரப்பகுதிகளில், எல்லா வருவாய்த் தரப்பினரும் தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கும் நிலையே உள்ளது. நகரங்களில் 40 விழுக்காட்டுக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. 36 விழுக்காட்டுக் குடும்பங்களுக்கு மட்டுமே கழிப்பிட வசதி உள்ளது. அசுத்தமான குடிநீர் காரணமாக பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். இதனால் குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் விவசாயத்துக்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. 2025ம் ஆண்டில் உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்...
இப்படி அமெரிக்கா பேசிக்கொண்டே இருக்கட்டும், ஆனால் நாம் தண்ணீரை இதுவரை எப்படி பயன்படுத்தியிருந்தாலும் அது முடிந்த கதையாக இருக்கட்டும். இனி அதனை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தினால்தான் நமக்கும், நமது எதிர்கால சந்ததிகளுக்கும் நல்லது. எனவே குடிப்பதற்கும், வீட்டின் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தும் தண்ணீரை மிகவும் கவனமுடன் செலவிடுவோம். பொது இடங்களாகட்டும், சிற்றுண்டிகளாகட்டும், தண்ணீரை விரயம் செய்யாமல் கவனமுடன் பயன்படுத்துவோம். திறந்த குழாய்களை மூடிவிட்டு வருவோம். மரங்கள் வெட்டப்படுவதை தடுப்போம், அத்துடன் ஒரு மரத்தை வெட்டினால் இரு மரக்கன்றுகளை நடும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவோம்.
கணக்கு வழக்கில்லாமல் பணத்தைச் செலவு செய்வதற்கு, பணத்த தண்ணீரா செலவழிக்கிறாங்க என்று முன்பெல்லாம் ஓர் உவமை கூறுவார்கள். ஆனால் தண்ணீரைக்கூட காசு கொடுத்து வாங்கும் நிலையில் உள்ள நாம், தண்ணீரைக் காசு போல செலவிடாதிருப்போம். மனித உடலில் தசை 75 விழுக்காட்டு நீரையும், மூளை 90 விழுக்காட்டு நீரையும், எலும்பு 22 விழுக்காட்டு நீரையும், இரத்தம் 83 விழுக்காட்டு நீரையும் கொண்டிருக்கின்றன. எனவே மனித உடலில் தண்ணீரின் செயல்பாடுகள் மிக முக்கியமானதென உணருவோம்.
தமிழகத்தில் பல பத்தாண்டுகளுக்கு முன்பு வரை 39,000 ஏரிகள் இருந்தன. அவற்றில் 25,000க்கும் மேற்பட்டவை வானம் பார்த்த ஏரிகளாக இருந்துள்ளன. இன்றைக்கு தமிழகத்தில் 12,000க்கும் குறைவான ஏரிகளே உள்ளன. இருப்பவையும் குப்பை மேடாகவும், கழிவு நீர் குட்டைகளாகவும் காணப்படுகின்றன. எனவே நம்மிடையே இருக்கின்ற நன்னீர் நிலைகளையும், சதுப்பு நிலங்களையும், சோலைக்காடுகளையும், உவர்ப்பு நீர்நிலைகளையும் காக்க வேண்டியது நம்முன் இருக்கும் முதன்மையான பணியாக இருக்கின்றது. ஏனெனில் நம் உடலில் உள்ள சிறுநீரகத்தை போல், அழுக்கை உறிஞ்சி தண்ணீரைச் சுத்தப்படுத்தும் பணியை ஈரநிலங்கள் எனப்படும் சதுப்பு நிலங்கள் செய்து வருகின்றன. 40 ஹெக்டேர் உள்ள காடு ஒன்று, மனிதத் தலையீட்டால் அழியும்போது 1,500 வகை பூக்கும் செடி கொடிகளும், 700 வகை மரங்களும், 150 வகை பூச்சி புழுக்களும், 100 வகை ஊர்வனவும், 60 வகை நீர்நில வாழ்விகளும் அழிந்து போகின்றன.
'மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். பறவைகள் அற்ற உலகில் மனிதரால் வாழவே இயலாது' என்ற முதுபெரும் பறவையியலாளர் சலிம் அலியின் வார்த்தையைக் கவனத்தில் கொள்வோம். அடுத்த தலைமுறைக்கு 'தண்ணீர் இல்லாத நாட்டைக் கையளிக்கப் போகிறோமா என்பதை ஒரு நிமிடம் நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். தண்ணீரைக் காத்திட நாடு கடந்து கை கோர்ப்போம்.








All the contents on this site are copyrighted ©.