2013-09-21 17:13:41

தமிழகத்தில் காசநோய் பாதித்தவர்களில் 70 விழுக்காட்டினரே சிகிச்சை பெறுகின்றனர்


செப்.21,2013. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 விழுக்காட்டினரேக் கண்டறியப்பட்டு, சிகிச்சை பெறுவதாகவும், மீதியுள்ளோரின் நிலை தெரியவில்லை எனவும், தமிழககாசநோய் திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் இடம்பெற்ற தென்மண்டல காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரையாற்றிய திட்ட அலுவலர் லட்சுமி, தமிழகத்தில், பாதிக்கப்பட்டவர்களில் 70 விழுக்காட்டினரேக் கண்டறியப்பட்டுள்ளனர், மீதியுள்ளோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனரா இல்லை சிகிச்சை பெறாமல் விடுபட்டுள்ளனரா எனத் தெரியவில்லை என்றுக் கூறினார்.
தமிழகத்தில் மதுரை, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2400 தனியார் மருத்துவமனைகளுடன், காசநோய் திட்டத்தை தமிழக அரசு இணைந்து செயல்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதே கருத்தரங்கில் பேசியசென்னை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரெங்கநாதன், இந்தியாவில் இரண்டு கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு, 65 லட்சம் பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், ஒவ்வோர் இரண்டு நிமிடங்களுக்கும், மூன்று பேர் காசநோயால் இறக்கின்றனர் எனவும் புள்ளிவிவரங்களை வழங்கினார்.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.