2013-09-21 17:13:22

Cagliari நகரில் திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம்


செப்.21,2013. சர்தேனியா தீவின் போனாரியா மரியன்னை திருத்தலத்தை தரிசிப்பதற்கான ஆவலை கடந்த மேமாதம் 15ம்தேதி புதன் பொதுமறைபோதகத்தில் வெளியிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று அத்தீவின் கலியாரியில் தன் 10 மணிநேர திருப்பயணத்தை மேற்கொள்கிறார்.
அர்ஜென்டினாவின் Buenos Aires பேராயராகப் பணியாற்றியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் பொனாரியா மரியன்னை திருத்தலத்திலிருந்தே Buenos Aires என்ற பெயர் வந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞாயிறு காலை உள்ளூர் நேரம் 8.15 மணிக்கு சர்தேனியா தீவின் Cagliari-Elmas என்ற விமான நிலையத்தை அடையும் திருத்தந்தை, Carlo Felice என்ற சதுக்கத்தில் தொழில் உலகின் பல்வேறு பிரதிநிதிகளைச் சந்தித்தல், பொனாரியா (Bonaria) அன்னை மரியா திருத்தலத்தில் Cagliari நகரின் முக்கிய அதிகாரிகளையும், நோயுற்றோரையும் சந்தித்தல் ஆகியவைகளுக்குப்பின், அத்திருத்தலத்தில் பொதுமக்களுக்கான திருப்பலியை நிறைவேற்றுவார்.
சர்தேனியாவில் உள்ள ஆயர்களுடன் மதிய உணவு அருந்தியபின், மீண்டும் திருத்தலப் பேராலயத்திற்குச் சென்று, அங்கு, காரித்தாஸ் பணிகளால் பயன்பெறும் வறியோரையும், சிறைக் கைதிகளையும் சந்திப்பார் திருத்தந்தை. அதன்பின்னர், பாப்பிறைக் கல்விக்கூடங்களில் பயிலும் இறையியல் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பயிற்சிப் பொறுப்பாளர்களையும் சந்தித்து உரையாற்றிவிட்டு, மீண்டும் ஒருமுறை Carlo Felice சதுக்கம் சென்று இளையோரைச் சந்தித்து உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 6.30 மணியளவில் விமான நிலையத்திலிருந்து உரோம் நகருக்குத் திரும்புவார்.
திருத்தந்தை சர்தேனியா தீவில் நிறைவேற்றும் வழிபாடுகளில் கலந்துகொள்ள 3 இலட்சத்து 50 ஆயிரம் விசுவாசிகள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அத்தீவின் பத்திரிகைகள் கருத்துத்தெரிவித்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.