2013-09-20 15:31:29

செப்.21, 2013. கற்றனைத்தூறும்...... நாம் பார்க்க முடியாத புதன்


சூரியக்குடும்பத்தில் உள்ள புதனைத்தான் `பார்க்க முடியாத கிரகம்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் `மெர்குரி’ என்று அழைக்கப்படும் புதன், சூரியனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.
* பூமியின் விட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு தான், புதனின் விட்டம். அதேபோல பூமியின் மொத்த எடையில் 5.5 விழுக்காடுதான் புதனின் எடை.
* சூரியனை மிக வேகமாகச் சுற்றி வரும் புதன், சூரியனில் இருந்து சுமார் 5.8 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
* 24 மணி நேரம் கொண்ட நம்முடைய நாள் கணக்குப்படி 88 நாட்களில் புதன் கோளம் சூரியனைச் சுற்றி வருகிறது, அதாவது, புதனில் ஒரு வருடம் என்பது நமக்கு 88 நாட்களாகும்.
* மெர்குரி என்பது, உரோமைக் கலாச்சாரத்தில் `சந்தனத்தால் ஆன இறக்கைகளைக் கொண்ட தேவதூதனின்’ பெயராகும்.
* புதன் கோளம், சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், கண்ணைப்பறிக்கும் சூரிய ஒளிக்கு நடுவே இதைக் காண்பது கடினம். பொதுவாக சூரிய உதயத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும், சூரியன் மறைந்த ஒருமணி நேரத்திற்குப் பின்பும்தான் இதைப் பார்க்க முடியும். அதையும் எப்போதாவது தான் பார்க்க முடியும். எனவே, புதனைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
* புதன் கோளத்தைச் சுற்றி மிக மெல்லிய வளிமண்டலம் இருக்கிறது. இந்த வளிமண்டலம், சோடியம், பொட்டாசியம், ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனால் ஆனது.
* பகல் நேரத்தில் 427 டிகிரி செல்சியஸ் வெப்பமும், இரவு நேரத்தில் 173 டிகிரி செல்சியஸ் வெப்பமும் புதனில் காணப்படும்.

ஆதாரம் : ‘ஆழ்கடல் களஞ்சியம்’ இணையதளம்








All the contents on this site are copyrighted ©.