2013-09-19 16:42:20

லித்துவேனியப் பிரதமர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு


செப்.19,2013. செப்டம்பர் 19, இவ்வியாழன் காலை உரோம் நேரம் 11 மணியளவில், லித்துவேனியப் பிரதமர் Algirdas Butkevičius அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்.
இரு தலைவர்களுக்கும் இடையேயான இச்சந்திப்பு அரைமணி நேரம் நீடித்தது. அதன்பின், பிரதமர் Algirdas Butkevičius அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்த்தோனே அவர்களையும், பன்னாட்டு உறவுகளின் திருப்பீடச் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புகளின்போது, லித்துவேனியாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்தும், கல்வி, சமுதாய மேம்பாடு ஆகியவைகளில் இவ்விரு தரப்பினரும் எவ்வகையில் இன்னும் இணைந்து செயலாற்ற முடியும் என்பது குறித்தும் பேசப்பட்டது.
குடும்பங்களுக்கான ஆதரவு, மற்றும், ஆன்மீக மதிப்பீடுகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தல் போன்றவைகளில் திருஅவையின் அர்ப்பணம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிப்பு அவையின் தலைமைப் பொறுப்பை தற்போது லித்துவேனியக் குடியரசு மேற்கொண்டிருப்பதால், மத்தியக்கிழக்குப் பகுதியில் அமைதியை நிலைநாட்டவேண்டியதில் ஐரோப்பாவின் பங்கு, குறிப்பாக சிரியாவில் அரசியல் தீர்வு, பேச்சுவார்த்தைகள் மூலம் காணப்படவேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து இச்சந்திப்புகளின்போது விவாதிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.