2013-09-19 16:41:18

மேலான பதவிகளைப் பற்றி கனவுகண்டு, தற்போதைய பணியை நிறைவின்றி செய்யக்கூடாது - திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.19,2013. மக்களின் ஆயர்களாக நம்மை நாமே நியமித்துக் கொள்வதில்லை, மாறாக, இந்த நியமனம் கிறிஸ்து நமக்கு வழங்கும் ஒரு கொடை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வாண்டு புதிதாகப் பொறுப்பேற்ற இலத்தீன் மற்றும் கீழை வழிபாட்டு முறைகளைச் சார்ந்த 120 கத்தோலிக்க ஆயர்கள் வத்திக்கானில் மேற்கொண்ட ஒரு கூட்டத்தின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் இவ்வியாழன் காலை சந்தித்தபோது, அவர்களிடம் ஆயர்கள் பணியைக் குறித்து மூன்று கருத்துக்களை திருத்தந்தை எடுத்துரைத்தார்.
தாங்கள் ஏற்றுள்ள பொறுப்பை தாராள மனதுடன் நிறைவேற்றுவது, மந்தையுடன் இணைந்து நடப்பது, மக்களுடன் தங்குவது என்ற மூன்று கருத்துக்கள் ஆயர்களின் அழைப்பில் அடங்கியுள்ள அடிப்படை உண்மைகள் என்று திருத்தந்தை கூறினார்.
மந்தையுடன் இணைந்து நடப்பது என்ற கருத்தை திருத்தந்தை விளக்கியபோது, மறைமாவட்டத்தில் உழைக்கும் அருள் பணியாளர்களுக்கு நேரம் ஒதுக்கி, அவர்களுடைய கடினமானச் சூழல்களைப் புரிந்துகொள்வதும் ஆயர்களின் ஒரு முக்கிய கடமை என்பதை வலியுறுத்தினார்.
மக்களுடன் தங்குவது என்ற கருத்தை எடுத்துரைத்தபோது, தங்களுக்கு வழங்கப்பட்ட மறைமாவட்டங்களில் மக்களுடன் முழுநேரம் தங்கியிருப்பதில் ஆயர்கள் நிறைவுகாண வேண்டும் என்றும், அவர்களுடைய தற்போதைய நிலையைவிட மேலான பதவிகளைப் பற்றி கனவுகண்டு, தற்போதைய பணியை நிறைவின்றி செய்யக்கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவுறுத்தினார்.
ஆயர்கள் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet, கீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் தலைவர் Leonardo Sandri, மற்றும் மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle ஆகியோர் புதிய ஆயர்களோடு திருத்தந்தையைச் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.