2013-09-18 16:04:30

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


செப்.18,2013. திருஅவை நம் தாய் என்ற உருவகம் குறித்து இன்று நான் உங்களோடு கருத்துக்களைப் பகிர்ந்துக்கொள்ள ஆவல் கொள்கின்றேன் என புதன் மறைக்கல்வி போதனையைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வுலகின் அன்னையர்கள் தங்கள் குழந்தைகளுக்காக எவ்வாறு வாழ்ந்து துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை பின்னணியாகக்கொண்டு, நம் தாய் திருஅவை குறித்து நோக்குவோம். முதலில், நம் முழு வளர்ச்சியை நோக்கி நாம் வளர உதவும் வகையில், நம் அன்னையர்கள் தங்களின் அன்பு மற்றும் கனிவு மூலம் நாம் நடைபோடவேண்டிய சரியான பாதையை நமக்குக் காட்டுகின்றனர். அதுபோலவே, திருஅவையும் நம் வளர்ச்சி நோக்கிய பாதையை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. இரண்டாவதாக, நம் வாழ்வின் வழியில் நாம் நடைபோடும் நேரங்களிலும், சரியான பாதையைவிட்டு விலகி நாம் வழிதவறி நடைபோடும்போதும், நம்மை எந்நேரத்தில், எவ்வாறு புரிந்துகொண்டு நம்மோடு இணைந்து நடந்து நம்மை வழிநடத்தவேண்டும் என்பதை அன்னையர்கள் தெரிந்துவைத்துள்ளனர். இதுபோல், திருஅவையும் கருணையுடனும், நம்மைப் புரிந்துகொண்டும், நமக்குத் தண்டனைத்தீர்ப்பு வழங்காமல், தன் கதவுகளை நமக்கு மூடாமல், அதேவேளை, நமக்கு மன்னிப்பை வழங்கி, நாம் சரியான பாதைக்குத் திரும்பிவர உதவுகின்றது. மூன்றாவதாக, நம்மிடம் என்ன குறைபாடுகள் இருந்தாலும் நம் அன்னையர்கள் நமக்காகப் பரிந்துப் பேசுவதில் சோர்வடையாமல் இருப்பதுபோல், திருஅவையும், நம்மோடு எப்போதும் உடனிருந்து, நம் அனைத்துச் சூழல்களையும், துன்பங்களையும், தேவைகளையும், செபத்தின்வழி இறைவனின் கைகளில் ஒப்படைக்கின்றது.
ஆகவே, நாம் திருஅவையில் நல்ல ஓர் அன்னையைக் காண்கிறோம். அந்த நல்ல அன்னை நாம் வாழ்வில் நடைபோடவேண்டிய பாதையை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார், பொறுமை, கருணை, புரிந்துகொள்ளுதல் ஆகியவைகளுடன் நம்மோடு நடைபோடுகின்றார், மற்றும் நம்மைக் கடவுளின் கைகளில் ஒப்படைக்கின்றார்.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்து இப்பொதுமறைபோதகத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை வழங்கினார். வியட்நாம் அரசிலிருந்து வந்திருந்த மத விவகாரங்களுக்கான அமைச்சகப் பிரதிநிதிகள் குழுவுக்கும் தன் தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்தார் திருத்தந்தை.
ஒவ்வோர் ஆண்டும் செபடம்பர் 21ம்தேதியை ஐக்கிய நாடுகள் நிறுவனம், அனைத்துலக அமைதி நாளாக சிறப்பிப்பதை குறித்தும் இப்புதன் பொதுமறைபோதகத்தின் இறுதியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த நாளில் அமைதிக்காகச் செபிக்குமாறு உலக கிறிஸ்தவ சபைகளின் அவை விண்ணப்பம் ஒன்று விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவ்வுலகில் அதிக அளவில் போராட்டங்களை எதிர்நோக்கிவரும் பகுதிகளுக்காக, ஏனையக் கிறிஸ்தவர்களுடன் இணைந்து அமைதி எனும் கொடைக்காக இறைவனிடம் செபிக்குமாறு உலகிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கர்களையும் விண்ணப்பிப்பதாகவும் கூறினார். இயேசுவின் கொடையான இந்த அமைதி, நம் ஒவ்வொருவர் இதயத்திலும் குடியிருந்து, நல்மனதுடையோர் மற்றும் நாடுகளின் தலைவர்களின் நோக்கங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதாக; இன்னும் போர்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இடங்களில் அரசியல் தீர்வுகளுக்கென எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதில் நம்மை அர்ப்பணிப்போமாக என்று கூறிய திருத்தந்தை, . இந்நேரத்தில் தன் எண்ணங்கள் சிறப்பான விதத்தில் சிரியா மக்களை நோக்கிச் செல்கின்றன என்றார். இம்மக்களின் துயர்கள் அகலவேண்டுமெனில், பேச்சுவார்த்தைகளும் சமரசப்பேச்சுகளும் இடம்பெற வேண்டும்; அத்தோடு, நீதியும், அனைத்துமக்களின், குறிப்பாக வலுவிழந்தோர் மற்றும் தங்களைக் காப்பாற்றும் வழியறியாதோரின் மாண்பும் மதிக்கப்படவேண்டும் என அழைப்புவிடுத்து தன் புதன் மறைபோதகத்தை நிறைவுச்செய்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.