2013-09-18 16:27:31

திருத்தந்தையின் தர்மச்செயல்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட பேரருள்திரு Krajewski, பேராயராகத் அருள்பொழிவு


செப்.18,2013. தேவையில் இருப்போருக்குப் பணிபுரிவது என்பது அவர்களை வரவேற்பதிலும், அவர்களுடன் உறவை வளர்ப்பதிலும், முக்கியமாக அமைந்துள்ளது என்று வத்திக்கான் நகரின் தலைமைப் பொறுப்பாளராக இருக்கும் கர்தினால் Giuseppe Bertello அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றும் அனைத்து பொது வழிபாடுகளிலும் அவருக்கு உதவிகள் செய்துவந்த பேரருள்திரு Konrad Krajewski அவர்களை, கர்தினால் Bertello அவர்கள் இச்செவ்வாய் மாலை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் பேராயராக அருள்பொழிவு செய்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து தர்மச் செயல்களுக்கும் பொறுப்பாக பேரருள்திரு Krajewski அவர்களை, திருத்தந்தை நியமித்ததையடுத்து, அவர் பேராயராகத் அருள்பொழிவு செய்யப்பட்டார்.
இந்த அருள்போழிவுத் திருப்பலியில், இயேசு சபையினர் நடத்தும் Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தில், சில நாட்களுக்கு முன்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரையின் ஒருசில வரிகளை தன் மறையுரையில், மேற்கோளாகக் கூறிய கர்தினால் Bertello அவர்கள், வறியோருக்குப் பணிபுரிவது திருஅவையின் முக்கியமான பணிகளில் ஒன்று என்று குறிப்பிட்டார்.
பேராயர் Krajewski அவர்கள் அருள் பொழிவு செய்யப்பட்ட இத்திருப்பலியில், மக்களில் ஒருவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொண்டு அவரை ஆசீர்வதித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்புதன் காலையில், பேராயர் Krajewski அவர்களையும், அவரது உறவினர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.