2013-09-18 15:59:29

செப். 19, 2013. கற்றனைத்தூறும்...... பற்பசையில் எது சிறந்தது?


'பற்களை வலுப்படுத்தும், காரையைத் தவிர்க்கும், பற்களை வெண்மையாக வைத்திருக்கும், பற்கூச்சத்தைப் போக்கும் பற்பசை என பல்வேறு வகையான பற்பசைகள் உள்ளன.
ஃப்ளோரைட்(Fluoride) பற்பசை : ஃப்ளோரைட் உள்ள பற்பசை, பற்களின் எனாமலைப் பாதிக்கக்கூடிய அமிலத்திற்கு எதிராகச் செயல்பட்டு, எனாமலைப் பாதுகாத்து பல்லை வலுப்படுத்துகின்றது; பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது.
காரை படியாமல் தடுக்கும் பற்பசை : இதில் இருக்கும் ஃப்ளோரைட், பைரோபாஸ்பேட்ஸ்(Pyrophosphates), டெட்ராசோடியம் பைரோபாஸ்பேட் (Tetrasodium pyrophosphate) மற்றும் ஸிங்க் சிட்ரேட்(Zinc citrate) போன்ற மூலப்பொருட்கள் காரை படியாமல் காப்பதுடன், பற்களில் படிந்த காரையையும் நீக்குகின்றன. மேலும் சில பற்பசைகளில் உள்ள ட்ரைக்ளோஸன் (Triclosan)என்னும் மூலப்பொருள் வாயில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கிறது.
வெண்மைப்படுத்தும் பற்பசை: முத்து போன்ற வெண்மையான பற்களைத் தரும். இவற்றில் உள்ள சிராய்க்கும் தன்மைகொண்ட கால்ஷியம் பாஸ்பேட், அலுமினா போன்ற மூலப்பொருட்கள் உணவு, பானம் மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் கறைகளை நீக்கி பற்களைப் பளபளப்பாக்குகின்றன. அதிகம் சிராய்க்கும் தன்மையால், சில சமயம் பற்களுக்குப் பாதிப்பைக்கூட ஏற்படுத்தலாம். எனவே, இதை தினசரி பயன்படுத்த விரும்பினால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பற்கூச்சத்தைத் தவிர்க்கும் பற்பசை : ஸ்ட்ரான்ஷியம் குளோரைட் என்னும் மூலப்பொருள் பல்லின் மிக நுண்ணிய குழாய்களை (Microtubules)அடைத்து, வெப்பம் மற்றும் குளிர்ச்சி உணர்வுகளை பற்களில் உள்ள நரம்புகளைச் சென்றடையாமல் தடுக்கிறது. பொட்டாஷியம் சிட்ரேட் (Potassium citrate) மற்றும் பொட்டாஷியம் நைட்ரேட் (potassium nitrate) போன்ற மூலப்பொருட்கள் நரம்புகள் வழியாக வலி உணர்வு கடத்தப்படுவதைத் தடுப்பதுடன், பற்கூச்சம் உள்ளவர்களுக்கு ஏற்படும் வலிகளைக் குறைக்கிறது.
ஈறுகளைப் பாதுகாக்கும் பற்பசை : இதில் இருக்கும் ஸ்டேனஸ் ப்ளோரைட் (Stannous fluoride) பற்களின் ஈறுகளில் வீக்கம் வராமல் தடுக்கிறது.
டிரெய்னிங் ஜெல் பற்பசை : பல் தேய்க்கக் கற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கான பற்பசை. இந்தக் குழந்தைகள், சாதாரண பற்பசைகளை பயன்படுத்தினால், பற்பசையை விழுங்கும் அபாயம் ஏற்படலாம். இதில் உள்ள அதிகப்படியான ஃப்ளோரைடால், 'ஃப்ளோரோஸிஸ்’ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தடுப்பதற்காகவே குழந்தைகளைக் கவரும் நிறங்களில், ப்ளேவர்களில், குறைந்த அளவு ஃப்ளோரைட் உள்ள ட்ரெய்னிங் ஜெல் பற்பசை கிடைக்கிறது.
மூலிகை பற்பசை: வேதியப்பொருள் சேர்க்காத, முற்றிலும் இயற்கையான மூலிகைகளால் தயாரிக்கப்படுகிறது. சாதாரண பற்பசைகளில் உள்ள சில மூலப்பொருட்களுக்கு சென்சிட்டிவாக இருந்தால், இந்த பற்பசைகளை பயன்படுத்தலாம். இரத்தக்கசிவைத் தடுக்கும் ஆற்றல் இருந்தாலும், சில சமயம் வீக்கத்தை மறைத்துவிடும். அதனால் 'க்ரானிக் பெரிஓடோன்டைட்டிஸ்’(Chronic periodontitis) என்ற பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் போகக்கூடும்.'
'ஃப்ளோரைட் பற்பசைதான் எல்லாப் பற்களுக்கும் ஏற்றது. அடிக்கடி பற்பசையை மாற்றுவதும் தவறு. பற்களின் பாதிப்புக்கு ஏற்ப, மருத்துவரின் ஆலோசனைப்படி பற்பசையைப் பயன்படுத்தலாம். என்ன பற்பசை, எவ்வளவு பயன்படுத்துகிறோம் என்பதைவிட, பற்பசையைக் கொண்டு எப்படி பல்துலக்குகிறோம் என்பதில்தான் பல்லின் நலம் அடங்கியிருக்கிறது.

ஆதாரம் : டாக்டர் விகடன்








All the contents on this site are copyrighted ©.