2013-09-17 16:46:41

சுமுகமான தேர்தல் குறித்தே எதிர்பார்ப்பு இருப்பதாக, நெதர்லாந்து தூதரிடம் யாழ்ப்பாண ஆயர்


செப். 17, 2013. வடக்கு மாநில அவைத் தேர்தல், சுதந்திரமாகவும் அமைதியாகவும் நடைபெற வேண்டும் என்பதே தமிழர்களுடைய விருப்பமாக உள்ளதால், தேர்தல் விடயங்களில் இராணுவத்தின் தலையீட்டை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றார் யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம்.
வடக்கு மாநில அவைத் தேர்தல் குறித்த நிலைவரங்களை அறிந்து கொள்வதற்கென இத்திங்களன்று, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நெதர்லாந்து தூதுவர் லூயில் டபிள்யூ.எம்.பெற் அவர்களுடன் தேர்தல் நிலவரம் மற்றும் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகக் கலந்துரையாடிய ஆயர் சவுந்தரநாயகம், தமிழ் மக்களைப் பொருத்தவரையில் இது மிக முக்கியமான தேர்தலாகும் என்றார்.
மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்த யாழ்ப்பாண ஆயர் சவுந்தரநாயகம், தேவையற்ற தலையீடுகள் தொடர்ந்தால் தேர்தல் தொடர்பான மக்களின் ஆர்வம் குறையும் என்ற கவலையையும் வெளியிட்டார்.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.