2013-09-16 16:02:28

வாரம் ஓர் அலசல் பூமியின் பாதுகாவலர்களாக....


RealAudioMP3 செப்.16,2013. இந்நாள்களில் எந்த ஊடகத்தைத் திறந்தாலும் சிரியாவைப் பற்றிய பேச்சுத்தான். சிரியா நச்சு வாயுக்களின் புகை மண்டலமாக மாறியிருக்கிறது. அன்று வியட்நாம், அண்மை ஆண்டுகளில் இலங்கை, இராக், ஆப்கானிஸ்தான், லிபியா, இப்போது சிரியா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நாடுகளில் இடம்பெறும் தொடர் குண்டு வெடிப்புகளில் காற்றுமண்டலம் கறுப்புப்புகை மண்டலமாக மாறியிருக்கின்றது. காலநிலை கணித்துச் சொல்லமுடியாத அளவுக்கு அச்சுறுத்தி வருகிறது. உலகின் சில பகுதிகளில் கோடைகாலம், குளிர்காலம் போலவும், குளிர்காலம், கோடைகாலம் போலவும் மாறி வருகின்றன. உரோமையில் இவ்வாண்டு வசந்த காலம் இல்லாமலே கோடைகாலம் துவங்கியது. வெப்பநிலை மாற்றங்களினால் பூச்சிகள் பரப்பும் தொற்று நோய்கள் உலகின் அறுவடைகளை 10 விழுக்காடு முதல் 16 விழுக்காடுவரை பாதித்துள்ளன என்று Exeter பல்கலைக்கழகத்தின் Dan Bebber கூறியுள்ளார். பாலூட்டிகளிடமிருந்து 3,20,000 புதிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 70 விழுக்காடு மனிதர்களுக்குப் பரவக்கூடியவை என்று இம்மாதத்தில் வெளியான ஆய்வு ஒன்று எச்சரிக்கின்றது. சீனாவின் Hubei மத்திய மாநிலத்தில் ஒரு வேதிய ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்ட அமோனியா, Fuhe நதியில் கலந்ததால் ஒரு இலட்சம் கிலோகிராம் எடையளவுக்கு செத்த மீன்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து ஷங்காய் நகரில் ஒடும் ஆற்றிலிருந்து 16 ஆயிரம் இறந்த பன்றிகள் எடுக்கப்பட்டன. பிரிட்டனில், கடும் பனி மூட்டத்தால், நான்கு வழி சாலையில் சென்ற, 100க்கும் அதிகமான வாகனங்கள் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின. இதில், 200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இப்படி மனிதரின் பேராசையாலும், பிறர்மீது அக்கறையற்ற தன்மையாலும் பருவகாலங்கள் மாறி, சுற்றுச்சூழல் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மனிதர் உட்பட அனைத்து உயிரினங்களின் வாழ்விலும் துன்பம்தரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும், இந்தப் பூமியில் உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ஓசோன் படலம் (Ozone Layer) ஒரு முக்கிய காரணம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இந்த வாயுப் படலத்தில் ஓட்டைகள் விழுந்ததாலே மனிதருக்குப் பல நோய்களும் மற்றும் பிற சுற்றுச்சூழல் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. அண்டார்டிக் பகுதியில் ஓசோன் வாயுப் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டைகள், கோடைகாலத்தில் பெய்யும் கனமழையோடு தொடர்புடையன எனவும், வருங்காலத்தில் கனமழையும், இயற்கைப் பேரிடர்களும் இடம்பெறும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 150 ஆண்டுகளில் முதன்முறையாக தற்போது ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆபத்தைக்கொணரும் வெள்ளம் ஏற்பட்டது. இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் என முன்கூட்டியே அறிந்திருந்தாலும் அவற்றால் ஏற்படும் வெள்ளத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இம்மாதத்தில் ஜப்பானை மூன்று நாட்களுக்கு இரண்டு சுழற்காற்றுகள் தாக்கியதில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததுடன் பலர் காயமுமடைந்தனர்.

ஓசோன் வாயுப் படலம் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்த 24 நாடுகள் 1987ம் ஆண்டில் கானடாவின் Montrealலில் நடைபெற்ற ஐ.நா.கூட்டத்தில் இதனைப் பாதுகாக்கும் ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தின. இதனால் அவ்வாண்டு செப்டம்பர் 16ம் தேதியன்று அவ்வொப்பந்தம் நாடுகளின் கையெழுத்துக்கு வைக்கப்பட்டது. இதன் பயனாக 1989ம் ஆண்டில் 196 நாடுகள் அதில் கையெழுத்திட்டன. 1994ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் அனைத்துலக நாளையும் உருவாக்கியது. 1995ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி ஓசோன் வாயுப் படலத்தைப் பாதுகாக்கும் முதல் அனைத்துலக நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அதற்குப் பின் ஆண்டுதோறும் செப்டம்பர் 16ம் நாளன்று இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது. இத்திங்களன்றும் இந்த அனைத்துலக நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களைக் கொண்ட வாயு ஆக்ஸிஜன் என்றால், மூன்று ஆக்ஸிஜன் அணுக்களை கொண்ட வாயு ஓசோன். 1840ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த வேதியல் வல்லுனரான கிறிஸ்டியன் ஃப்டரிச் ஷோன்பியன்(Christian Friedrich Schonbein 1799 – 1868) என்பவர் இந்த வாயுக்களை முதன் முதலாக கண்டுபிடித்தார். இந்த வாயுக்கள் சற்று துர்நாற்றம் வீசும் தன்மைகொண்டதாக இருந்ததால், நாற்றம் என்று பொருள்படும் கிரேக்கமொழிச் சொல்லான ஓசோன் என்ற பெயரை இந்த வாயுக்களுக்கு அவர் சூட்டினார். புவியின் மேற்பரப்பிலிருந்து 17 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரையிலான வளிமண்டலப்பகுதி முழுவதும் ஏறத்தாழ 98 விழுக்காடு ஓசோன் வாயுக்களால் நிரப்பப்பட்டிந்தாலும்கூட புவியின் மேற்பரப்பிலிருந்து 25 முதல் 35 கிலோமீட்டர் வரையிலான வளிமண்டலப் பகுதியில்தான் இவ்வாயுக்களின் அடர்த்தி அதிகம். இதைத்தான் நாம் ஓசோன் படலம் என்று அழைக்கிறோம். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் சூரியனிலிருந்து வரும் அல்ட்ரா வைலட் என்ற புறஊதாக்கதிர்களின் தாக்குதல்களிலிருந்து காக்கும் மிக முக்கிய பணியை இந்த ஓசோன் படலம் செய்து வருகிறது.

ஃப்ரிட்ஜ் (Fridge), ஃப்ரீசர் (Freezer) மற்றும் ஏர்கண்டிஷனர்கள் (Air-Conditioner) உள்ளிட்ட குளிர்சாதனப் பெட்டிகள் வெளியேற்றும் குளோரோ ஃப்ளோரோகார்பன் மற்றும் ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன்கள், ஓசோன் படலம் பாதிக்கப்பட காரணமாகின்றன. குளோரோ ஃப்ளோரோகார்பன்கள் காற்றைவிட அடர்த்தி அதிகம். எனவே இவை மீவளி மண்டலத்தில், அதாவது தட்பவெப்பநிலை மாறாமல் இருக்கும் வளி மண்டலத்தின் ஏழு மைல்களுக்கு மேற்பட்ட அடுக்கில் சென்று கலக்க 2 முதல் 5 ஆண்டுகள் எடுக்கும். குளோரோ ஃப்ளோரோகார்பன்களும், ஹைட்ரோ ஃப்ளோரோ கார்பன்களும் மீவளி மண்டலத்தை அடையும்போது சூரியனிடமிருந்துவரும் அல்ட்ரா வைலட் கதிர்கள் பிரிந்து குளோரின் அணுக்களை உருவாக்குகின்றன. இந்த அணுக்கள் ஓசோன் வாயுப் படலத்தைப் பாதிக்கின்றன. ஒரு குளோரின் அணு, ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட ஓசோன் அணுத் துணுக்களாக மாறும். மேலும், பூச்சிக்கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப்படும் மீத்தெய்ல் புரோமெய்டு(methyl bromide), தீயணைக்கப் பயன்படுத்தப்படும் ஹேலன்ஸ்(halons), தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் methyl chloroform உட்பட பிற வேதியப் பொருள்களும் ஓசோன் வாயுப் படலத்தைப் பாதிக்கின்றன. மீத்தெய்ல் புரோமெய்டும், ஹேலன்சும் வெடிக்கும்போது அவை புரோமின் அணுக்களை வெளியிடுகின்றன. அவை குளோரின் அணுக்களைவிட 60 மடங்கு சேதத்தை ஓசோன் அணுக்களுக்கு ஏற்படுத்தக்கூடியன.

வளிமண்டலத்தில் இந்த ஓசோன் வாயுக்கள் அழிக்கப்படும்போது உடனடி எதிர்விளைவாக பூமியின் வெப்பநிலை அதிகரிக்க ஆரம்பிக்கும், இதன் காரணமாக பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயரத் தொடங்கும். மற்றொருபுறம் அதிக வெப்பம் காரணமாக வறட்சி அதிகரிக்க ஆரம்பிக்கும். அதேசமயம் எரிமலைகளும், பெருங்கடல்களும் பெருமளவில் குளோரினை வெளியிடுகின்றனவே என்று நாம் கேட்கலாம். ஆனால், இந்தக் குளோரின் நீரில் எளிதாகக் கரைந்துவிடும். வளிமண்டலத்தில் மழையில் மறைந்துவிடும். மாறாக, குளோரோ ஃப்ளோரோகார்பன்கள், தாழ்வான வளிமண்டலத்திலும் நீரிலும் கரையாது. மனிதரால் செய்யப்படும் இந்தக் குளோரின் மீவளி மண்டலத்தை அடைந்து அழிவைக் கொணர்கின்றன. இதனால் அல்ட்ரா வைலட் கதிர்கள் மனிதரை நேரடியாகத் தாக்குகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து தோல் புற்றுநோய் உள்ளிட்ட எண்ணற்ற நோய்களை உண்டாக்கிவிடும். இக்கதிர்கள் தாவரங்களைத் தாக்கும்போது அவற்றின் உற்பத்தி திறன் குறைய ஆரம்பிக்கும். கடந்த 2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, உலகம் முழுவதும் 5 முதல் 10 விழுக்காடுவரை குளோரோ ஃப்ளோரோ கார்பன்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இன்றுவரை வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்ட குளோரின் வாயுக்களின் தாக்குதல்களிலிருந்து ஓசோன் படலம் மீள்வதற்கு இன்னும் 100 முதல் 150 ஆண்டுகள் ஆகலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் ஓசோன் படலத்தைப் பாதிக்கும் வேதியப் பொருள்களை வெளியிடுவதை மனிதர் நிறுத்தினால் 2050ம் ஆண்டுக்குள் அதனை பழைய நிலைக்குக் கொண்டுவந்து விடலாம் என்று ஓர் ஆய்வு நம்பிக்கை அளிக்கின்றது.

கோவையை அடுத்துள்ள, அரசூர் கிராமத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள "பசுமை பஞ்சாயத்து' என்ற திட்டம் இந்நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது. இம்மாதம் 7ம் தேதியன்று இத்திட்டத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் துவக்கி வைத்துள்ளார். அரசூர் கிராம ஊராட்சியில், 66 தொழிற்சாலைகள், மத்திய அரசால் அமைக்கப்பட்ட, "பவுண்டரி கிளஸ்டர்' ஆகியவை அமைந்துள்ளன. நீர் ஆதாரம், மழைப்பொழிவு எல்லாமே இப்பகுதியில் குறைவு என்பதோடு, சரளை மண் நிறைந்த பகுதி என்பதால், மரங்களும், பசுமையும் மிகக் குறைவு. நகரங்களுக்குள் மரம் வளர்க்க போதுமான இடமில்லாததால், கிராமப்புறங்களில் அதிகளவில் மரங்களை வளர்க்கும் பொருட்டு, "பசுமை பஞ்சாயத்து' என்ற திட்டத்தைச் செயல்படுத்த, கோவையைச் சேர்ந்த, "சிறுதுளி' மற்றும் "ராக்' அமைப்புகள் இணைந்து திட்டமிட்டதன் முதல் முயற்சியே அரசூர் கிராமத்தில் முழு வெற்றி பெற்றுள்ளது. 11 ஏக்கர் புறம்போக்கு இடத்தில் 3,200 குழிகளை வெட்டி, அவற்றில் ஆல், அரசு, வேம்பு, புங்கன், பூவரசு, நாவல், வாகை போன்ற, நம் மண்ணின் மரங்கள் மட்டுமே ஓராண்டுக்கு முன்னர் நட்டு இப்போது சோலையாகக் காட்சியளிக்கின்றன. இதில் "பசுமைப்புரட்சி' என்ற அக்கிராம இளையோர் அமைப்பின் பங்கு பெரிது. கோவை மாவட்டத்திலுள்ள 229 கிராம ஊராட்சிகளிலும், காலியிடங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு சோலைகள் அமைப்பதே "பசுமை பஞ்சாயத்து' திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பசுமைப்புரட்சித் திட்டத்தை கோவை மாவட்டத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும், நம் வீடுகளிலும் நம் ஊர்களிலும் செயல்படுத்தலாம். அப்போது சுற்றுச்சூழலைக் காத்து இப்பூமியின் பாதுகாவலர்கள் என்ற பெருமையை நாம் பெறுவோம்.

வாருங்கள், பசுமைப் புரட்சி செய்வோம்.
புத்துயிர் தரும் மரம் வளர்க்க
இன்றே புது நீதி செய்குவோம்!
இனி வரும் தலைமுறை
பசுமையில் வாழ புது விதி செய்குவோம்!








All the contents on this site are copyrighted ©.