2013-09-14 17:38:34

மரண தண்டனை ஒரு தீர்வாக எந்நாளும் மாறப்போவதில்லை - இந்திய ஆயர் பெர்னான்டஸ்


செப்.14,2013. மரண தண்டனை ஒரு தீர்வு அல்ல; அது, ஒரு தீர்வாக எந்நாளும் மாறப்போவதில்லை என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி, புது டில்லியில் இளம்பெண் ஒருவர், ஒரு குழுவினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால், அவர் சில நாட்கள் சென்று உயிரிழந்தார்.
இக்கொடுமையைச் செய்த நான்கு இளையோருக்கு இவ்வெள்ளிக்கிழமை இந்திய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து, தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து, ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், மும்பை உயர் மறைமாவட்டத்தின் குடும்பநலம் மற்றும் பெண்கள் பணிக்குழுவின் தலைவர் ஆயர் தோமினிக் சாவியோ பெர்னான்டஸ் அவர்கள், மரண தண்டனை எக்காலமும் ஒரு தீர்வாகாது என்று கூறினார்.
மரண தண்டனைக்குப் பதில், இவ்விளையோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவர்கள், சிறை வாழ்வின்போது, தாங்கள் செய்த கொடுமையை உணர்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று ஆயர் பெர்னான்டஸ் கருத்து தெரிவித்தார்.
பெண்களுக்குத் தகுந்த மதிப்பளித்து, அவர்களைப் பேணிக் காப்பதில் இந்தியச் சமுதாயம் பெருமளவு தவறியுள்ளது என்றும், இந்த மனநிலையில் தீவிர மாற்றங்கள் தேவை என்பதையும் ஆயர் பெர்னான்டஸ் தன் பேட்டியில் வலியுறுத்தினார்.
இந்த மாற்றங்களைக் கொணர, இந்தியக் கல்விக் கூடங்கள் முக்கியப் பங்காற்றவேண்டும் என்றும், தீவிர முயற்சிகள் எடுக்கவேண்டும் என்றும் ஆயர் பெர்னான்டஸ் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.