2013-09-13 16:01:51

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொணர்ந்துள்ள மாற்றங்கள் திருஅவையின் வேர்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன - பேராயர் பியெத்ரோ பரோலின்


செப்.13,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையில் கொணர்ந்துள்ள மாற்றங்களை ஒரு புரட்சி என்ற கோணத்தில் நோக்குவதற்குப் பதிலாக, திருஅவையின் வேர்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு முயற்சியாகக் காண்பதே சிறந்தது என்று பேராயர் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
வருகிற அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் திருப்பீடச் செயலர் பொறுப்பை ஏற்கவிருக்கும் பேராயர் பரோலின் அவர்கள், Venezuela நாட்டின் El Universal என்ற நாளிதழுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
திருப்பீடம் செயலாற்றும் வழிகளை மறுபரிசீலனைச் செய்வதற்கு அக்டோபர் மாதத் துவக்கத்தில் கூடிவரும் கர்தினால்கள் குழுக்களைக் குறித்துப் பேசிய பேராயர் பரோலின் அவர்கள், திருஅவையில் மாற்றங்கள் என்று கூறும்போது, அது, உலக அரசுகளை ஒத்த மாற்றங்கள் என்று எண்ணிப்பார்ப்பது தவறு என்று கூறினார்.
உலக அரசுகளிலிருந்து மாறுபட்டு, ஒரு மாற்று சாட்சியமாக திருஅவை விளங்கும்போதுதான் அது, இவ்வுலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்கமுடியும் என்பதையும் பேராயர் பரோலின் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.