2013-09-12 16:25:29

செப்.,13,2013. கற்றனைத்தூறும் ...கலபாகோஸ் தீவுகள்(Galápagos Islands)


கலபாகோஸ் தீவுகள், பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகைக்கு இரு பக்கமும், ஈக்குவதோர் நாட்டுக்கு மேற்கே 926 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள எரிமலைத் தீவுகளாகும். இத்தீவுகளில் பேசப்படும் முக்கிய மொழி இஸ்பானியம். இங்கு 25 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் வாழ்கின்றனர். Charles Darwin கடல் வழியே HMS Beagle என்னும் கப்பலில் கலபாகோஸ் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகளுக்காக இத்தீவுகள் பெருமை மிக்கவையாக உள்ளன. இங்கு 18 பெரிய தீவுகளும் 3 சிறிய தீவுகளும் 107 சிறிய தீவுத் திட்டுகளும் உள்ளன. இந்தத் தீவுகள் புவியியல் உயர்வெப்பப் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு எரிமலை வெடிப்புகள் அடிக்கடி இடம்பெறுவதுண்டு. மிகப் பழைய தீவு குறைந்தது 80 இலட்சம் ஆண்டுகள் முதல் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. பழைய தீவுகள் கடலுக்குள் மறைய மறைய புதிய தீவுகள் உருவாகின்றன. மிகவும் அண்மையில் 2007ம் ஆண்டில் இடம்பெற்ற எரிமலை வெடிப்புகளினால் Isabela, Fernandina ஆகிய தீவுகள் உருவாகின.
தொமினிக்கன் சபை அருள்பணியாளர் Fray Tomas de Berlanga என்பவர் பெரு நாட்டுக்குச் செல்லும் வழியில் 1535ம் ஆண்டில் தற்செயலாக அவரது கப்பல் கலபாகோஸ் தீவுகளில் நின்றது. பொதுவாக 19ம் நூற்றாண்டின் முதற்பகுதிவரை இத்தீவுகள் தென் அமெரிக்காவிலிருந்து இஸ்பெயினுக்கு பொன், வெள்ளி போன்றவற்றைக் கடத்தும் கடற்கொள்ளைக்காரர்களின் புகலிடமாகவே இருந்து வந்திருக்கிறது. James Colnett என்ற பிரித்தானிய அரசின் கடற்படை அதிகாரி 1793ம் ஆண்டில் பசிபிக் கடலில் திமிங்கில வேட்டையாடுவோருக்கான மையமாக இதனை உருவாக்கினார். இவர்கள் இத்தீவுகளில் ஆயிரக்கணக்கான ஆமைகளை அவற்றின் கொழுப்புகளுக்காக வேட்டையாடிக் கொன்றனர். இந்த ஆமை வேட்டைகளினால் இத்தீவுகளின் பல உயிரினங்கள் முழுவதும் அழிந்தோ அல்லது அவற்றின் எண்ணிக்கை குறைந்தோ வந்தது. ஈக்குவதோர் நாடு கலபாகோஸ் தீவுகளை பிப்ரவரி 12, 1832ம் ஆண்டில் தன்னுடன் இணைத்துக்கொண்டது. இவை ஈக்குவாடோரின் தீவுக்கூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

ஆதாரம் : விக்கிப்பீடியா








All the contents on this site are copyrighted ©.