2013-09-12 16:28:45

இரு உலகப் போர்கள் நமக்குப் பாடங்களாக அமைய வேண்டும் - முதுபெரும் தந்தை Kirill


செப்.12,2013. கடந்த நூற்றாண்டில் இரு உலகப் போர்கள் வழியாக மனிதகுலம் அனுபவித்த கொடுமைகளும், 21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமேரிக்கா சந்தித்த உயிர் இழப்புக்களும் நமக்குப் பாடங்களாக அமைய வேண்டும் என்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை Kirill அவர்கள் கூறியுள்ளார்.
2001ம் ஆண்டு, செப்டம்பர் 11, அமெரிக்காவில் நிகழ்ந்த தாக்குதல்களின் 12ம் ஆண்டு நினைவையொட்டி, அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்களுக்கு, முதுபெரும் தந்தை Kirill அவர்கள் அனுப்பியுள்ள மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.
சிரியாவிலும், மத்தியக் கிழக்குப் பகுதியிலும் அமைதி முயற்சிகள் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த விண்ணப்பம் துவங்கி, உலகெங்கும் உள்ள அனைத்து மதத் தலைவர்களும் கூறும் அறிவுரைகளுக்கு அமெரிக்க அரசுத் தலைவரும் ஏனைய தலைவர்களும் செவி மடுப்பர் என்ற தன் நம்பிக்கையை முதுபெரும் தலைவர் Kirill வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, எக்காரணம் கொண்டும், வெளிநாட்டுப் படைகள் சிரியாவில் இராணுவத் தலையீடு மேற்கொள்ளப்படக் கூடாது என்றும், அத்தகைய முயற்சி சிரியாவைத் தாண்டி வேறுபல நாடுகளில் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சூழலை உருவாக்கும் என்றும் இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin அவர்கள், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆதாரம் : Fides / AsiaNews








All the contents on this site are copyrighted ©.