2013-09-11 16:14:53

உரோம் நகரின் Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தில் திருத்தந்தை செலவிட்ட நேரம்


செப்.11,2013. செப்டம்பர் 10, இச்செவ்வாயன்று பிற்பகல் 3.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்தும் Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தில் செலவிட்ட நேரத்தைக் குறித்து திருப்பீட பேச்சாளர் அருள்பணியாளர் Federico Lombardi செய்தியாளர்களிடம் விவரங்களை எடுத்துரைத்தார்.
உரோம் நகரில் அமைத்துள்ள Gesu எனப்படும் புகழ்பெற்ற கோவிலின் அருகே அமைந்துள்ள இந்த மையத்தில் பணிபுரிவோர் மற்றும் இங்கு உதவிகள் பெறும் புலம்பெயர்ந்தோர் என 500க்கும் அதிகமானோரை, ஊடகங்களின் ஊடுருவல் ஏதுமின்றி, தனிப்பட்ட முறையில் திருத்தந்தை சந்தித்தார்.
சூடான் நாட்டைச் சேர்ந்த Adam என்ற இளைஞரும், சிரியா நாட்டைச் சேர்ந்த Carol என்ற இளம்பெண்ணும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பின்னர், திருத்தந்தை கூடியிருந்தோருக்கு ஓர் உரை வழங்கினார்.
"அவர்களைப் போலவே" என்ற மையக் கருத்துடன் இயேசு சபை உலகத் தலைவர் அருள் பணியாளர் Adolfo Nicolas அவர்கள் எழுதியிருந்த ஒரு செபம் வேண்டப்பட்டது. புலம் பெயர்ந்தோர் பணியை இயேசு சபையில் உருவாக்கிய முன்னாள் தலைவர் அருள்பணியாளர் பேத்ரோ அருப்பே அவர்களின் கல்லறை Gesu கோவிலில் அமைந்துள்ளது. திருத்தந்தையும் புலம்பெயர்ந்தோரின் இரு பிரதிநிதிகளும் அக்கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தில் 2012ம் ஆண்டு மட்டும் 21,000க்கும் அதிகமான புலம் பெயர்ந்தோர் உதவிகள் பெற்றுள்ளனர் என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.