2013-09-10 16:15:58

கற்றனைத் தூறும் உலக வர்த்தக மையம் (WTC)


செப்டம்பர் 11 என்ற தேதியைக் குறிப்பிட்டதும், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நம் நினைவில் பதிவது, 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் வாஷிங்டன் நகரிலும் பயணிகள் விமானங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்கள். நியூயார்க், மன்ஹட்டன் (Manhattan) எனுமிடத்தில் உயர்ந்து நின்ற உலக வர்த்தக மையம் (World Trade Centre) என்றழைக்கப்படும் இரு கட்டடங்கள் இரு விமானங்கள் கொண்டு தாக்கப்பட்ட நிகழ்வை, ஊடகங்களின் வாயிலாக, பல கோடி உலக மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்ததால், அது அவர்கள் மனதில் ஆழப்பதிந்த ஒரு நிகழ்வாக மாறியது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து, ஒருசில மணிநேரங்களில் இவ்விரு கட்டடங்களும் முற்றிலும் இடிந்து விழுந்தன. இவை இடிந்து விழுந்த இடங்கள் Ground Zero என்று அழைக்கப்பட்டது. அந்த இடத்தில் வேறொரு கட்டடம் கட்டப்படக்கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்தாலும், அமெரிக்க அரசும், நியூயார்க் பெருநகர நிர்வாகமும் எடுத்த தீர்மானத்தின்படி, 2006ம் ஆண்டு அவ்விடத்தில் கட்டடங்கள் உருவாக ஆரம்பித்தன. இக்கட்டடங்களில் மிக உயரமான ஒரு கட்டடம் இவ்வாண்டின் இறுதியில் அல்லது 2014ம் ஆண்டு துவக்கத்தில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கட்டடத்திற்கு 'விடுதலைக் கோபுரம்' (Freedom Tower) என்று முதலில் பெயரிடப்பட்டிருந்தாலும், தற்போது இது அதிகாரப்பூர்வமாக, One World Trade Center, அதாவது, 'உலக வர்த்தக மையம் ஒன்று' என்றே அழைக்கப்படுகிறது.
பூமிக்கடியில் 5 அடுக்குகளையும், பூமிக்குமேல் 104 மாடிகளையும் உள்ளடக்கிய வண்ணம் 1776 அடி உயரம் கொண்ட இக்கட்டடம், பூமியின் வட கோளத்தில் அமைந்துள்ள மிக அதிக உயரமான கட்டடமாகவும், உலக அளவில், நான்காவது உயரமான கட்டடமாகவும் தற்போது கருதப்படுகின்றது.

ஆதாரம் : Wikipedia








All the contents on this site are copyrighted ©.