2013-09-07 15:12:45

எழுத்தறிவை ஊக்குவிப்பதன்மூலம் இலட்சக்கணக்கானவர்கள் தங்களின் சொந்த வாய்ப்பு அத்தியாயத்தை எழுத முடியும், ஐ.நா.


செப்.,07,2013. இன்று உலகில் எழுத வாசிக்கத் தெரியாமல் இருக்கும் 77 கோடியே 30 இலட்சம் இளையோர் மற்றும் வயதுவந்தோர், தங்களுக்கான வேலை வாய்ப்புக்களைப் பெற முடியாமலும், பேருந்துகளின் எண்களைக்கூட வாசிக்கத் தெரியாமலும் உள்ளனர் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக எழுத்தறிவு நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இன்று உலகில் எழுத வாசிக்கத் தெரியாதவர்களில் மூன்றில் இரண்டு பாகமாக இருக்கும் பெண்கள், சமூகத்தில் முழுமையாக ஈடுபட இயலாமல் இருக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
கல்வியறிவை வழங்குவதில் நாம் முதலீடு செய்யும்போது மனித மாண்பு, முன்னேற்றம், அமைதி ஆகியவற்றில் முதலீடு செய்கின்றோம் எனவும், ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை வழங்கும் உலகளாவிய கல்வி என்ற நடவடிக்கையை முதன்முதலாகத் தான் தொடங்கிவைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பப்பள்ளிக்குச் செல்லும் வயதுடைய குறைந்தது 25 கோடிச் சிறார்க்கு எழுத வாசிக்கத் தெரியாது, இவர்களில் பாதிச் சிறார் நான்காம் வகுப்பை முடிக்கு முன்னரே படிப்பை நிறுத்தி விட்டனர் எனவும் கூறியுள்ள பான் கி மூன், நடுத்தரப் பள்ளிப் படிப்பை முடித்துள்ள மேலும் 20 கோடி வளர்பருவத்தினருக்கு அடிப்படை கல்வியறிவுத் திறமைகள் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்
கல்வியறிவை வளர்ப்பதற்கு நாடுகள் முன்னுரிமை கொடுக்குமாறு இந்த அனைத்துலக எழுத்தறிவு நாளில் கேட்பதாக தனது செய்தி கூறியுள்ள வெளியிட்டுள்ளார் பான் கி மூன்.
செப்டம்பர் 8, அனைத்துலக எழுத்தறிவு தினமாகும்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.