2013-09-06 16:03:17

அமைதிக்கான செபத்தின்போது ஐம்பது அருள்பணியாளர்கள் ஒப்புரவு அருள்சாதனம் நிறைவேற்றுவார்கள்


செப்.,06,2013. சிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் அமைதி நிலவுவதற்கென இச்சனிக்கிழமை இரவு 7 மணிக்கு வத்திக்கான் பேதுரு வளாகத்தில் செபங்கள் தொடங்கும்போது, அவ்வளாகத்தில் தூண்கள் இருக்கும் பகுதியில் ஐம்பது அருள்பணியாளர்கள் ஒப்புரவு அருள்சாதனம் நிறைவேற்றுவார்கள் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
இறைவனோடும், உடன்வாழும் சகோதர சகோதரிகளோடும் ஒப்புரவை ஏற்படுத்தும் மனிதரின் இதயங்களில் உண்மையான அமைதி பிறக்கின்றது என்று சொல்லி, செபங்கள் நடைபெறும்போது, ஒப்புரவு அருள்சாதனம் நிறைவேற்றப்பட வேண்டுமெனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே கேட்டுக்கொண்டுள்ளார் என்று திருப்பீட திருவழிபாட்டு அலுவலகம் அறிவித்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அமைதிக்கான செப வழிபாட்டை ஆரம்பித்து வைப்பார். ஐந்து பகுதிகளாக நடைபெறும் இவ்வழிபாட்டில், ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் சிரியா, எகிப்து, புனிதபூமி, அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தம்பதியர் தூபக் காணிக்கை கொடுப்பார்கள்.
இரவு 11 மணிவரை நடைபெறும் இவ்வழிபாட்டின் இறுதியில் திருநற்கருணை ஆசீர் அளிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.