2013-09-05 16:52:57

திருத்தந்தை பிரான்சிஸ் : பிரிவினைகளை மேற்கொள்ளும் நோக்கில் நம் செப முயற்சிகளை இன்னும் ஆழப்படுத்தவேண்டும்


செப்.,05,2013. மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் கிறிஸ்தவ சபையும், கத்தோலிக்கத் திருஅவையும் ஒரே திருப்பலி மேடையை பகிரும் நாள் வரவில்லை எனினும், கிறிஸ்தவ ஒன்றிப்பு, அது குறித்த கலந்துரையாடல் போன்றவைகளை இணைந்து நடத்த இவ்விருவருக்கும் பொதுவாக இருக்கும் விசுவாசமே உதவுகின்றது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்திருந்த மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் கிறிஸ்தவ சபைத்தலைவர் இரண்டாம் பசிலியோஸ் மார்த்தோமா பவுலோஸ் அவர்களையும், அவருடன் வந்த குழுவையும் இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, 1983 ம் ஆண்டு உரோமையிலும், 1986ம் ஆண்டு இந்தியாவிலும் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலுக்கும் அப்போதைய மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் கிறிஸ்தவ சபைத்தலைவர் முதலாம் மொரான் மார் பசிலியோஸ் மார்த்தோமா மேத்யூஸுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்புகளையும் நினைவூட்டினார்.
கடந்த 30 ஆண்டுகளில் இந்த இரு கிறிஸ்தவ சபைகளுக்குமிடையே இடம்பெற்ற முன்னேற்ற நடவடிக்கைகளையும் தன் உரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், தப்பான முற்சார்பு எண்ணங்களைக் கைவிட்டு, பிரிவினைகளை மேற்கொள்ளும் நோக்கில் நம் செப முயற்சிகளை இன்னும் ஆழப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.