2013-09-05 17:08:10

ஜி20 மாநாட்டையொட்டி இரஷ்ய அரசுத்தலைவருக்கு திருத்தந்தை கடிதம்


செப்.,05,2013. அடிப்படை நலஆதரவுப் பணிகள், அனைவருக்கும் உறைவிடம், வேலை, பசி அகற்றல் போன்றவைகளை உள்ளடக்கிய நீதியான, சகோதரத்துவ உலகைக் கட்டியெழுப்பும் பணிக்குத் தெளிவான அனைத்துலகச் சட்டங்கள் தேவைப்படுகின்றன என எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார வலிமைமிக்க 20 நாடுகளின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் இரஷ்யக் கூட்டமைப்பின் அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஒருவரையொருவர் சார்ந்து வாழவேண்டிய நிலையில் இருக்கும் இன்றைய நவீன உலகு நீதியான பொருளாதாரச் சட்டங்களால் வழிநடத்தப்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய உலகம் எதிர்பார்த்திருப்பது மாண்புநிறைந்த வாழ்வு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டுமென்பதே எனத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இன்றைய உலகம் எதிர்நோக்கிவரும் ஆயுதமோதல்கள் இந்த எதிர்பார்ப்புகளுக்கு எதிராகச் செல்வதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைதியின்றி பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது என்பதையும், வன்முறைமூலம் அமைதியைப் பெற முடியாது என்பதையும் தனது கடிதத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, சிரியாவில் இடம்பெறும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளை ஆராயுமாறும் ஜி20 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.